கிரிக்கெட்

கடைசி ஒரு நாள் போட்டியில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை - யுஸ்வேந்திர சாஹல், டோனி கலக்கல் + "||" + Australia lost the last one-day match: The Indian team is the record holder - Uswendra Sahal, Dhoni Smart play

கடைசி ஒரு நாள் போட்டியில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை - யுஸ்வேந்திர சாஹல், டோனி கலக்கல்

கடைசி ஒரு நாள் போட்டியில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை - யுஸ்வேந்திர சாஹல், டோனி கலக்கல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹலும், பேட்டிங்கில் டோனியும் முத்திரை பதித்தனர்.
மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மெல்போர்னில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக முகமது சிராஜ், அம்பத்தி ராயுடு, குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர்கள் விஜய் சங்கர், கேதர் ஜாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இடம் பிடித்தனர். தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கருக்கு இது அறிமுக ஒரு நாள் போட்டியாகும்.


மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் 10 நிமிடம் தாமதமாக தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ஆடுகளத்தன்மை மற்றும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை கவனத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரியும், கேப்டன் ஆரோன் பிஞ்சும் இறங்கினர். 2 பந்து வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 20 நிமிடம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய வீரர்களை, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமியும், புவனேஷ்வர்குமாரும் துல்லியமாக பந்து வீசி திணறடித்தனர். காரி (5 ரன்) புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் கேட்ச் ஆனார். கேப்டன் பிஞ்ச் (14 ரன், 24 பந்து), புவனேஷ்வர்குமாரின் பவுலிங்கில் எல்.பி.டபிள்யூ. ஆனார். பிஞ்ச், இந்த தொடரில் மூன்று ஆட்டங்களிலும் புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சுக்கே இரையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் உஸ்மான் கவாஜாவும், ஷான் மார்சும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டனர். இருப்பினும் அந்த அணி முதல் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 45 ரன்களே எடுத்தது. இதில் தொடர்ச்சியாக 8 ஓவர்களில் பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை.

ஓரளவு நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடிக்கு, யுஸ்வேந்திர சாஹல் தனது முதல் ஓவரிலேயே ‘செக்’ வைத்தார். ஸ்கோர் 100 ரன்களை (23.1 ஓவர்) எட்டிய போது ஷான் மார்ஷ் (39 ரன், 54 பந்து, 3 பவுண்டரி), சாஹல் லெக்-சைடில் வைடாக வீசிய பந்தில் இறங்கி வந்து அடிக்க முற்பட்டு ஏமாந்து போனார். அவரை, கண்ணிமைக்கும் நேரத்தில் விக்கெட் கீப்பர் டோனி ஸ்டம்பிங் செய்தார். அதே ஓவரில் கவாஜா (34 ரன்) பந்து வீசிய சாஹலிடமே பிடிபட்டார்.

இதன் பின்னர் சாஹலின் சுழல் ஜாலம், ஆஸ்திரேலியாவை மிரள வைத்தது. ஒரு பக்கம் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் போராட மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தன. ரன்ரேட்டை அதிகரிக்க முயற்சித்த மேக்ஸ்வெல்லும் (26 ரன், 19 பந்து, 5 பவுண்டரி) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ஹேன்ட்ஸ்கோம்ப் களத்தில் நின்ற வரை அந்த அணி 250 ரன்களை தாண்டும் போலவே தோன்றியது. ஹேன்ட்ஸ்கோம்ப் (58 ரன், 63 பந்து, 2 பவுண்டரி) சாஹலின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அத்துடன் அவர்களின் உத்வேகமும் முடங்கியது.

முடிவில் ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.

அடுத்து 231 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 9 ரன்னிலும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் (46 பந்து) வெளியேறினர்.

இதையடுத்து கேப்டன் விராட் கோலியும், முன்னாள் கேப்டன் டோனியும் ஜோடி சேர்ந்தனர். மெதுவான தன்மையுடன் மந்தமாக காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினம் என்பதை உணர்ந்த இவர்கள், அவசரம் காட்டாமல் பொறுமையை கடைப்பிடித்தனர்.

டோனி, ரன் கணக்கை தொடங்கும் முன்பே வெளியேறி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த ‘லட்டு’ போன்ற கேட்ச்சை ‘பேக்வர்டு பாயிண்ட்’ திசையில் நின்ற மேக்ஸ்வெல் கோட்டை விட்டார். அது தான் ஆஸ்திரேலியாவுக்கு வினையாக மாறியது. தடுமாற்றத்துடன் தொடங்கிய டோனி சிறிது நேரத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். மறுபக்கம் 10 ரன்னில் கேட்ச் மற்றும் 32 ரன்னில் ரன்-அவுட் வாய்ப்பு ஆகிய இரு கண்டத்திலும் தப்பி பிழைத்த விராட் கோலி 46 ரன்களில் (62 பந்து, 3 பவுண்டரி) விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரியிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இதன் பின்னர் டோனியுடன், ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் கூட்டணி அமைத்தார். இருவரும் திட்டமிட்டு, நிதானமாக பேட்டிங் செய்தனர். ஒன்று, இரண்டு, மூன்று வீதம் ரன்கள் எடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினர். இதனால் ஸ்கோர் ஆமை வேகத்திலேயே நகர்ந்தது. இருவரும் நிலைகொண்டு விளையாடிய போதிலும், அதிரடி காட்டாததால் ரன்தேவை அதிகரித்துக்கொண்டே போனது. கடைசி 6 ஓவர்களில் 52 ரன்கள் தேவைப்பட்டதால், இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன் பிறகு கடைசி 3 ஓவர்களில் 27 ரன்கள் தேவையாக இருந்த போது மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதன் பின்னர் 48-வது ஓவரில் 2 பவுண்டரி உள்பட 13 ரன்கள், 49-வது ஓவரில் 2 பவுண்டரி உள்பட 13 ரன்கள் வீதம் இருவரும் எடுத்த பிறகே நிம்மதி வந்தது. வெளியில் உட்கார்ந்து இருந்த நமது வீரர்களின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட போது, கேதர் ஜாதவ் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு ஆட்டத்தை சுபமாக முடித்து வைத்தார்.

இந்திய அணி 49.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. தனது 70-வது அரைசதத்தை நிறைவு செய்த டோனி 87 ரன்களுடனும் (114 பந்து, 6 பவுண்டரி), 4-வது அரைசதத்தை எட்டிய கேதர் ஜாதவ் 61 ரன்களுடனும் (57 பந்து, 7 பவுண்டரி) களத்தில் இருந்தனர். இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் திரட்டியது சிறப்பு அம்சமாகும்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. முன்னதாக சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தன.

ஆஸ்திரேலிய மண்ணில், இரு நாட்டு இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி வெல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு அங்கு ஒரு முறை மட்டுமே இரு அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரில் இந்தியா ஆடியிருந்தது. 2016-ம் ஆண்டில் நடந்த அந்த தொடரில் ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கோப்பையை வென்று இருந்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் சாஹல் புதிய சாதனை

இந்திய சுழற்பந்து வீச்சாளர் 28 வயதான யுஸ்வேந்திர சாஹல் இந்த ஆட்டத்தில் 10 ஓவர்கள் பந்து வீசி 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரே ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். சாஹலையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 4 பவுலர்கள் மட்டுமே ஒரு நாள் போட்டி இன்னிங்ஸ் ஒன்றில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே இந்தியாவின் அஜித் அகர்கர் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6/42, மெல்போர்ன், 2004-ம் ஆண்டு), ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (6/43, இந்தியாவுக்கு எதிராக, மெல்போர்ன், 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி), இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் (6/45, பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2011-ம் ஆண்டு) ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர். அதே சமயம் ஆஸ்திரேலியாவில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் மிகச்சிறந்த பந்து வீச்சாக இது பதிவானது.

தொடர்நாயகன் டோனி

இந்திய விக்கெட் கீப்பர் டோனியின் ஆட்டத்திறன் குறித்து சமீபகாலமாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு எல்லாம் இந்த தொடரில் முற்றுப்புள்ளி வைத்து விட்ட 37 வயதான டோனி மூன்று ஆட்டங்களிலும் அரைசதம் விளாசியதுடன் (51, 55, 87 ரன்), போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் கில்லாடி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டியிருக்கிறார். கடைசி ஆட்டத்தில் அவருக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. 0 மற்றும் 74 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை ஆஸ்திரேலிய வீரர்கள் வீணடித்தனர்.

இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் (224 ரன்) முதலிடம் பிடித்தார். அவருக்கு அடுத்த இடத்தை டோனி (193 ரன்) பெற்றார். இரண்டு ஆட்டங்களில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததுடன், விக்கெட் கீப்பிங்கில் ஒரு கேட்ச் மற்றும் 2 ஸ்டம்பிங்கும் செய்திருந்த டோனி தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒரு நாள் கிரிக்கெட்டில் டோனி தொடர்நாயகன் விருது பெறுவது இது 7-வது முறையாகும்.

தொடரை இழக்காத முதல் அணி

இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணம் இதுவரை இல்லாத அளவுக்கு தித்திப்புடன் முடிவடைந்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தனதாக்கி புதிய சகாப்தம் படைத்தது. இப்போது ஒரு நாள் தொடரும் இந்தியாவின் வசம் ஆகியிருக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலிய பயணத்தில் எந்த ஒரு தொடரையும் இழக்காமல் திரும்பும் முதல் வெளிநாட்டு அணி என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.

அடுத்து நியூசிலாந்து பயணம்

இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக நியூசிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறது. நியூசிலாந்தில் இந்திய அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நேப்பியரில் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.