கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி + "||" + In Ranji Cricket, Vidarbha and Saurashtra have qualified for semi-final

ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி

ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
நாக்பூர்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. நாக்பூரில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் விதர்பா, உத்தரகாண்ட் அணியை சந்தித்தது.

முதல் இன்னிங்சில் முறையே உத்தரகாண்ட் அணி 355 ரன்னும், விதர்பா அணி 629 ரன்னும் எடுத்தன. பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய உத்தரகாண்ட் அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து இருந்தது.


5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 2-வது இன்னிங்சில் 65.1 ஓவர்களில் 159 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் விதர்பா அணி இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. விதர்பா அணி தரப்பில் உமேஷ் யாதவ், ஆதித்யா சர்வாத் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

உத்தரபிரதேசம்-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் லக்னோவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே உத்தரபிரதேச அணி 385 ரன்னும், சவுராஷ்டிரா அணி 208 ரன்னும் எடுத்தன. 177 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய உத்தரபிரதேச அணி 194 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

இதனை அடுத்து 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து இருந்தது. 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா அணி 115.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது.

சவுராஷ்டிரா அணி ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமான இலக்கை (372 ரன்கள்) எட்டிப்பிடித்து சாதனை படைத்தது. இதற்கு முன்பு 2008-09-ம் ஆண்டில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசாம் அணி 371 ரன் இலக்கை சேசிங் செய்ததே சாதனையாக இருந்தது. முதல் சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஹர்விக் தேசாய் 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். புஜாரா 67 ரன்னுடனும், ஷெல்டன் ஜாக்சன் 73 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

அரைஇறுதி ஆட்டங்களில் கேரளா-விதர்பா, சவுராஷ்டிரா-கர்நாடகா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.