கிரிக்கெட்

‘ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் வேண்டுகோள் + "||" + Harikhi Pandya and Lokesh Rahul should cancel suspension, says Indian cricket board chief

‘ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் வேண்டுகோள்

‘ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் வேண்டுகோள்
‘ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சி.கே.கண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் டெலிவிஷன் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து இழிவான கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்கள். செக்ஸ் குறித்த அவர்களின் சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இடம் பெற்று இருந்த இருவரையும் உடனடியாக நாடு திரும்ப இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட இருவரும் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள்.


ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தண்டனை அளிப்பது யார்? என்பதில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து விசாரணை அதிகாரியை நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், ‘இரண்டு வீரர்களும் தவறு இழைத்து விட்டனர். அதற்காக அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், ஆஸ்திரேலிய தொடரில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதத்தை அளித்து இருக்கிறார்கள். விசாரணை நிலுவையில் இருந்தாலும் அவர்களுடைய இடைநீக்கத்தை ரத்து செய்வதுடன், உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும். நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இணைய இருவருக்கும் அனுமதி அளிக்க வேண்டும். இரண்டு வீரர்களின் பேச்சு முறையற்றது தான். இருப்பினும் அவர்கள் இருவரையும் சட்டத்துக்கு புறம்பாக நடப்பவர்கள் போல் பார்ப்பது தவறானது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். உலக கோப்பை போட்டிக்கு இன்னும் 4 மாதமே இருப்பதால் அதற்கு இருவரும் தயாராக போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களான அவர்கள் தங்களது தவறை திருத்தி கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு பொருளாளர் அனிருத் சவுத்ரி, தலைவர் சி.கே.கண்ணாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் ‘விரைவில் இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி வீரர்கள் மீதான சர்ச்சை குறித்து விசாரிக்க அதிகாரியை நியமிக்க வேண்டும்’ என்று வற்புறுத்தி இருந்தார். அதற்கு சி.கே.கண்ணா அளித்துள்ள பதிலில், ‘அடுத்த வாரத்தில் இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க இருக்கும் நிலையில் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி விசாரணை அதிகாரியை நியமிப்பது சரியானதாக இருக்காது’ என்று பதில் அளித்துள்ளார்.