கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நேப்பியரில் நாளை நடக்கிறது + "||" + India-New Zealand teams face first one-day cricket: In Napier Start Tomorrow

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நேப்பியரில் நாளை நடக்கிறது

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நேப்பியரில் நாளை நடக்கிறது
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நாளை நடக்கிறது.
நேப்பியர்,

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்து நியூசிலாந்தில் பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (புதன்கிழமை) நேப்பியரில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த போட்டியில் களம் காணும். நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்ற மகிழ்ச்சியுடன் களம் இறங்கும்.


இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக உள்ளது. இதேபோல் நியூசிலாந்து அணியிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். உள்ளூரில் நடைபெறும் போட்டி என்பதால் நியூசிலாந்து அணிக்கு கூடுதல் அனுகூலம் இருக்கும். அதேநேரத்தில் இந்திய அணி எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும் திறனுடன் விளங்குகிறது.

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியா, 3-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இந்த போட்டி தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. கடைசியாக 2014-ம் ஆண்டில் நியூசிலாந்தில் நடந்த இந்தியாவுகு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. முந்தைய தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நியூசிலாந்து-இந்தியா அணிகள் ஒருநாள் போட்டியில் இதுவரை 101 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இந்திய அணி 51 முறையும், நியூசிலாந்து அணி 44 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 5 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

இந்த போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகமது சிராஜ், கலீல் அகமது, முகமது ஷமி, விஜய் சங்கர், சுப்மான் கில்.

நியூசிலாந்து:
கனே வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், பிரேஸ்வெல், காலின் டி கிரான்ட்ஹோம், பெர்குசன், மார்ட்டின் கப்தில், மாட் ஹென்றி, டாம் லாதம், காலின் முன்ரோ, ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர்.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.