2018-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் 3 விருதுக்கு விராட்கோலி தேர்வாகி சாதனை


2018-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் 3 விருதுக்கு விராட்கோலி தேர்வாகி சாதனை
x
தினத்தந்தி 22 Jan 2019 11:15 PM GMT (Updated: 22 Jan 2019 10:20 PM GMT)

2018-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் 3 விருதுக்கு விராட்கோலி தேர்வாகி சாதனை படைத்தார்.

துபாய்,

2018-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தேர்வாகி வரலாற்று சாதனை படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2018-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகள், முன்னாள் வீரர்கள், மீடியா பிரதிநிதிகள் மற்றும் ஒளிபரப்பு நிறுவன பிரதிநிதிகள் என 36 உறுப்பினர்கள் கொண்ட தேர்வு கமிட்டியினரிடம் ஓட்டெடுப்பு நடத்தி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி வீரர் ஆகிய விருதுகளுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தேர்வானார். சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு விராட்கோலி, தென்ஆப்பிரிக்க பவுலர் காஜிசோ ரபடா இடையே போட்டி நிலவியது. முடிவில் அதிக ஓட்டுகள் பெற்று விராட்கோலி இந்த விருதை தட்டிச் சென்றார். சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் விருதுக்கு விராட்கோலியுடன் போட்டி போட்ட ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

30 வயதான விராட்கோலி 2017-ம் ஆண்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும், 2012, 2017-ம் ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருதையும் பெற்றுள்ளார். ஆனால் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வெல்வது இதுவே முதல்முறையாகும். ஐ.சி.சி.யின் 3 முக்கிய விருதுகளையும் ஒரே ஆண்டில் ஒருசேர கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட்கோலி படைத்தார். அதுமட்டுமின்றி ஐ.சி.சி.யின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி கனவு அணிகளின் கேப்டனாகவும் விராட்கோலி நியமிக்கப்பட்டார்.

விருதுக்குரிய காலக்கட்டத்தில் விராட் கோலி, 13 டெஸ்ட் போட்டியில் ஆடி 5 சதம் உள்பட 1,322 ரன்களும், 14 ஒருநாள் போட்டியில் விளையாடி 6 சதம் உள்பட 1,202 ரன்களும் சேர்த்துள்ளார்.

வளர்ந்து வரும் சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் தேர்வு பெற்றுள்ளார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்ற ரிஷாப் பான்ட் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 76 பந்துகளில் 172 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் விருதை பெறுகிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து ஸ்காட்லாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கிய கலும் மெக்லியோட் உறுப்பு நாட்டு அணியின் சிறந்த வீரர் விருதுக்கும், சர்ச்சைக்கு இடம் கொடுக்காமல் அணியை முன்மாதிரியாக வழி நடத்திய நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் உத்வேக விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டனர். 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய இறுதி ஆட்டம் ரசிகர்களின் மறக்க முடியாத தருணமாக தேர்வாகி இருக்கிறது.

ஐ.சி.சி. டெஸ்ட் கனவு அணி வருமாறு:-

டாம் லாதம் (நியூசிலாந்து), கருணாரத்னே (இலங்கை), கனே வில்லியம்சன் (நியூசிலாந்து), விராட்கோலி (இந்தியா, கேப்டன்), ஹென்றி நிகோல்ஸ் (நியூசிலாந்து), ரிஷாப் பான்ட் (இந்தியா, விக்கெட் கீப்பர்), ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட்இண்டீஸ்), ரபடா (தென்ஆப்பிரிக்கா), நாதன் லயன் (ஆஸ்திரேலியா), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), முகமது அப்பாஸ் (பாகிஸ்தான்).

ஐ.சி.சி. ஒருநாள் கனவு அணி வருமாறு:-

ரோகித் சர்மா (இந்தியா), பேர்ஸ்டோ (இங்கிலாந்து), விராட்கோலி (கேப்டன், இந்தியா), ஜோரூட் (இங்கிலாந்து), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து, விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), முஸ்தாபிஜூர் ரகுமான் (வங்காளதேசம்), ரஷித்கான் (ஆப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ் (இந்தியா), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).


Next Story