நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி எளிதில் வெற்றி மந்தனா சதம் அடித்தார் + "||" + First one day cricket Indian women team win
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி எளிதில் வெற்றி மந்தனா சதம் அடித்தார்
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மந்தனா சதத்தால் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது.
நேப்பியர்,
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் முதலாவது ஆட்டம் நேப்பியரில் நேற்று நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.4 ஓவர்களில் 192 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 36 ரன்னும், கேப்டன் சட்டர்த்வெயிட் 31 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பூனம் யாதவ், எக்தா பிஸ்த் தலா 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும், ஷிகா பாண்டே ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து எளிய இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்கள். அதிரடி காட்டிய மந்தனா தனது 4-வது சதத்தை எட்டினார். இதன் மூலம் இந்திய வீராங்கனைகளில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் மிதாலிராஜிக்கு (7 சதம்) அடுத்த இடத்தை மந்தனா பெற்றார்.
அணியின் ஸ்கோர் 190 ரன்னாக உயர்ந்த போது மந்தனா 104 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 105 ரன்கள் விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். இந்திய அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 81 ரன்னுடனும் (94 பந்து, 9 பவுண்டரி), தீப்தி ஷர்மா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய ஆண்கள் அணியை போல் பெண்கள் அணியும் தனது நியூசிலாந்து பயணத்தை வெற்றியுடன் அமர்க்களமாக தொடங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந் தேதி மவுன்ட் மாங்கானுவில் நடக்கிறது.