கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2–வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி + "||" + Against New Zealand India won the 2nd match

நியூசிலாந்துக்கு எதிரான 2–வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2–வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

மவுன்ட் மாங்கானு, 

நியூசிலாந்துக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

வலுவான தொடக்கம்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் டிம் சவுதி, சான்ட்னெர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக காலின் டி கிரான்ட்ஹோம், சோதி சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ரோகித் சர்மா பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கினார். இருவரும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பெர்குசன் ஓவர்களில் ரோகித் சர்மா, இரண்டு சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். தவான் அவ்வப்போது பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்தார்.

ரோகித் சர்மா 87 ரன்

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் (152 பந்து) சேர்த்து வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்தனர். ஷிகர் தவான் 66 ரன்களில் (67 பந்து, 9 பவுண்டரி) வைடாக விலகி சென்ற பந்தை அடித்து விக்கெட் கீப்பர் லாதமிடம் சிக்கினார். மறுமுனையில் சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 87 ரன்களில் (96 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். ரோகித்துக்கு இது 38–வது அரைசதமாகும்.

இதன் பின்னர் கேப்டன் விராட் கோலியும், அம்பத்திராயுடும் கைகோர்த்து ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தியதுடன், ரன்ரேட்டையும் 6 ரன்களை குறையாமல் கவனித்துக் கொண்டனர். அணியின் ஸ்கோர் 236 ரன்களை எட்டிய போது, விராட் கோலி (43 ரன், 45 பந்து, 5 பவுண்டரி) டிரென்ட் பவுல்ட் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை வளைத்து அடித்த போது, அது பேட்டில் சரியாக ‘கிளிக்’ ஆகாததால் கேட்ச் ஆகிப்போனார்.

325 ரன்கள் இலக்கு

இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி நுழைந்தார். கோலி வெளியேறியதும் ரன்வேகம் கொஞ்சம் தளர்ந்தது. 5 ஓவர்கள் பந்து எல்லைக்கோடு பக்கமே போகவில்லை. இந்த சூழலில் அம்பத்தி ராயுடு 47 ரன்களில் (49 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். அவருக்கு பிறகு கேதர் ஜாதவ் வந்தார்.

கடைசி கட்டத்தில் டோனி, மட்டையை வேகமாக சுழட்டினார். டோனி தூக்கிய ஒரு சிக்சருடன் அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடந்தது. பெர்குசன் வீசிய இறுதி ஓவரில் டோனி, ஜாதவ் இணைந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 21 ரன்கள் சேகரித்து அசத்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது. டோனி 48 ரன்களுடனும் (33 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேதர் ஜாதவ் 22 ரன்களுடனும் (10 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் இந்தியா 57 ரன்கள் திரட்டியது.

பின்னர் 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் முதல் பந்திலேயே சுலபமான ரன்–அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்தார். 12 ரன்னில் அவர் கொடுத்த சற்று கடினமான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டோனி நழுவ விட்டார். அத்துடன் 13 ரன்னில் ‘ஸ்லிப்’ பகுதியில் எகிறிய பந்தை ரோகித் சர்மா தரையோடு பிடித்ததால் தப்பினார். இப்படி 3 முறை அதிர்ஷ்டம் பெற்றும் கப்தில் அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. புவனேஷ்வர்குமார் வீசிய ஷாட்பிட்ச் பந்தை தட்டிவிட்ட போது அது தேர்டுமேன் பகுதியில் நின்ற சாஹலின் கையில் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. கப்தில் 15 ரன்னில் நடையை கட்டினார்.

வில்லியம்சன் 20 ரன்

2–வது விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் வந்தார். முகமது ‌ஷமியின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய வில்லியம்சன் (20 ரன்) அதே ஓவரில் வீழ்ந்தார். பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்திருந்த அவரது வீறுநடையும் முடிவுக்கு வந்தது. மற்றொரு தொடக்க வீரர் காலின் முன்ரோ (31 ரன், 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) யுஸ்வேந்திர சாஹலின் சுழலில், வலதுகை பேட்ஸ்மேன் போல் திரும்பி பந்தை விரட்ட முயற்சித்த போது எல்.பி.டபிள்யூ. ஆனார். தொடர்ந்து, அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராஸ் டெய்லர் (22 ரன்) ஜாதவின் பந்து வீச்சில் டோனியால் சாதுர்யமாக ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

100 ரன்னுக்குள் 4 முன்னணி தலைகள் உருண்டதால் நியூசிலாந்து அணி திண்டாடியது. மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவின் சுழற்பந்து ஜாலம் நியூசிலாந்தை மேலும் நிலைகுலைய வைத்தது. பின்வரிசையில் ஆல்–ரவுண்டர் டக் பிரேஸ்வெல் (57 ரன், 46 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) தவிர வேறு யாரும் தாக்குப்பிடிக்கவில்லை.

இந்தியா வெற்றி

முடிவில் நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குடியரசு தின விழாவோடு இந்த வெற்றியையும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். குடியரசு தினத்தன்று ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், சாஹல் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

நியூசிலாந்து மண்ணில் இந்தியாவின் பெரிய வெற்றி

*இந்த ஆட்டத்தில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. ரன் வித்தியாசம் அடிப்படையில் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணியின் மெகா வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 2009–ம் ஆண்டு ஹாமில்டனில் நடந்த ஆட்டத்தில் 84 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்ததே பெரிய வெற்றியாக இருந்தது.

*நியூசிலாந்து மண்ணில் அடுத்தடுத்த இரண்டு ஆட்டங்களில் 4 விக்கெட்டுகள் வீதம் சாய்த்த முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை குல்தீப் யாதவ் பெற்றார்.

*ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்தினர். இவர்கள் ஜோடியாக 100 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 14–வது முறையாகும். இந்திய அளவில் சச்சின் தெண்டுல்கர்–கங்குலி(26), ரோகித் சர்மா–விராட் கோலி (15) ஆகியோருக்கு அடுத்து அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் உருவாக்கி தந்த ஜோடியாக ரோகித்சர்மா–தவான் இணை திகழ்கிறது.

‘மிடில் ஓவர்களில் வேகம் காட்ட வேண்டும்’

‘‘எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. மீண்டும் ஒரு நிறைவான முயற்சியை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். பேட்டிங்கில் அனைவரும் சமநிலையுடன் விளையாடி பங்களிப்பை அளித்துள்ளோம். 324 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் இன்றைய நியூசிலாந்தின் பேட்டிங் வரிசையை பார்க்கும் போது, இதை சவாலான ஸ்கோர் என்று சொல்ல முடியாது. மிடில் ஓவர்களில் ரன்வேகம் குறைந்து விட்டதை ஒப்புக் கொள்கிறேன். நான் ஆட்டம் இழந்ததும் அடுத்து வந்த புதிய பேட்ஸ்மேன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. உலக கோப்பை போட்டி நெருங்கி வரும் வேளையில் இந்த வி‌ஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இந்த பகுதியில் வேகம் காட்டியிருந்தால், இன்னும் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக கிடைத்திருக்கும்’’– இந்திய கேப்டன் விராட் கோலி.