கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது, இந்திய அணி எதிர் பிரிவில் பாகிஸ்தானுக்கு இடம் + "||" + 20 Over World Cup Cricket Table output In the first match Meet South Africa, Indian team

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது, இந்திய அணி எதிர் பிரிவில் பாகிஸ்தானுக்கு இடம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது, இந்திய அணி எதிர் பிரிவில் பாகிஸ்தானுக்கு இடம்
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. எதிர் பிரிவில் பாகிஸ்தான் அணி இடம் பெற்றுள்ளது.
துபாய்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள 7 நகரங்களில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான மெல்போர்னில் நடத்தப்படுகிறது. இந்த உலக கோப்பைக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.


இதன்படி உலக தரவரிசையில் டாப்-8 இடங்களை வகிக்கும் அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் விளையாடுகின்றன. சூப்பர்-12 சுற்றுக்கு எஞ்சிய 4 அணிகள் தகுதி சுற்றில் ஆடி தேர்வாகும். தகுதி சுற்றில் இலங்கை, வங்காளதேசம் மற்றும் 6 சிறிய அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர்-12 சுற்றில் யார்-யாருடன் மோதுவது என்பது முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து மற்றும் இரண்டு தகுதி சுற்று அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு தகுதி சுற்று அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை அக்டோபர் 24-ந்தேதி பெர்த்தில் சந்திக்கிறது. அதே நாளில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுடன் சிட்னியில் மோதுகிறது. இங்கிலாந்தை இந்திய அணி நவம்பர் 1-ந்தேதி சந்திக்கிறது. நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் சவாலை அக்டோபர் 25-ந்தேதி நியூசிலாந்துடன் மெல்போர்னில் தொடங்குகிறது.

பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரெதிர் பிரிவில் இடம் பெற்று இருப்பதால் சூப்பர்-12 லீக் சுற்றில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பில்லை. இவ்விரு அணிகளும் ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் தொடக்க கட்ட லீக்கில் மோதாமல் போவது 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு (50 ஓவர்) பிறகு இதுவே முதல் முறையாகும். அந்த உலக கோப்பைக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும், ஐ.சி.சி. தொடர்களில் 5 முறை லீக் சுற்றில் சந்தித்து இருக்கின்றன. மேலும் வருகிற மே மாதம் இறுதியில் தொடங்கும் ஒரு நாள் போட்டி உலக கோப்பையிலும் மோத காத்திருக்கின்றன.

20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தானும், 2-வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இரு அணிகளும் டாப்-2 இடத்தில் இருப்பதால் தானாகவே வெவ்வேறு பிரிவுக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. ஆனால் அரைஇறுதியில் மோதிக்கொள்ள வாய்ப்புள்ளது.

போட்டி அட்டவணையை வெளியிட்டு ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், ‘உலக கோப்பை போட்டியை எப்போதெல்லாம் ஆஸ்திரேலியாவில் நடத்தும் வாய்ப்பை பெறுகிறோமோ அப்போதெல்லாம் உறுதியாக ஏறக்குறைய 100 கோடி ரசிகர்கள் போட்டியை காண்பார்கள் (நேரிலும், டி.வி, இணையதளம் வழியாகவும்) என்பதை அறிவோம். உலகின் சிறந்த வீரர்கள், அற்புதமான இடங்கள், ரசிகர்களின் அதீத ஆர்வம், ஆர்ப்பரிப்பு என அனைத்திலும் ஒன்றிணைந்த பரவசமிகுந்த கிரிக்கெட் போட்டியை இங்கு பார்க்க முடியும்’ என்று குறிப்பிட்டார்.

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலேயே நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை அங்குள்ள 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் தகுதி சுற்று அணி, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா மற்றும் தகுதி சுற்று அணி இடம் பிடித்து இருக்கின்றன.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 21-ந்தேதி ஆஸ்திரேலியாவுடன் சிட்னியில் பலப்பரீட்சை நடத்துகிறது. இறுதிப்போட்டி மெல்போர்னில் மார்ச் 8-ந்தேதி அரங்கேறுகிறது.