இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 384 ரன்கள் குவிப்பு - ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் சதம்


இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 384 ரன்கள் குவிப்பு - ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் சதம்
x
தினத்தந்தி 1 Feb 2019 11:03 PM GMT (Updated: 1 Feb 2019 11:05 PM GMT)

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 384 ரன்கள் குவித்துள்ளது. ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் சதம் விளாசினர்.

கான்பெர்ரா,

இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் நேற்று தொடங்கியது. கான்பெர்வில் டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 28 ரன்கள் எடுப்பதற்குள் மார்கஸ் ஹாரிஸ் (11 ரன்), உஸ்மான் கவாஜா (0), லபுஸ்சானே (6 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்சுடன், துணை கேப்டன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், ஒரு நாள் போட்டி போன்று வேகமாக அடித்து ஆடினர். ரன்ரேட் 4 ரன்களுக்கு மேலாக நகர்ந்தது. இவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. பர்ன்சுக்கு 34 ரன்னிலும், ஹெட்டுக்கு 87 ரன்னிலும் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை இலங்கை பீல்டர்கள் கோட்டை விட்டனர். இதனால் இந்த கூட்டணி மேலும் வலுவடைந்தது. 57 முதல் 73 ஓவர்கள் இடைவெளியில் மட்டும் 110 ரன்கள் (ரன்ரேட் 6.88) திரட்டி அசத்தினர். ஆடுகளம் பேட்டிங்குக்கே அதிகமாக ஒத்துழைத்தது.

இதற்கிடையே, ஜோ பர்ன்ஸ் தனது 4-வது சதத்தை எட்டினார். அத்துடன் ஆஸ்திரேலியாவின் இந்த கோடைகால சீசனில் அந்த அணிக்காக சதம் கண்ட முதல் வீரர் என்ற சிறப்பையும் பர்ன்ஸ் பெற்றார். சிறிது நேரத்தில் டிராவிஸ் ஹெட் தனது ‘கன்னி’ சதத்தை நிறைவு செய்தார். செஞ்சுரிக்கு பிறகும் இவர்களின் ரன்வேட்டை ஓயவில்லை.

அணியின் ஸ்கோர் 336 ரன்களாக உயர்ந்த போது, ஒரு வழியாக இந்த ஜோடியை இடக்கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ பிரித்தார். அவரது பந்து வீச்சில் டிராவிஸ் ஹெட் (161 ரன், 204 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.

பர்ன்ஸ்- ஹெட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 308 ரன்கள் சேர்த்து புதிய சாதனை படைத்தது. இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலிய ஜோடி ஒன்றின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான். இதற்கு முன்பு 1989-ம் ஆண்டு ஹோபர்ட்டில் நடந்த டெஸ்டில் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ்- ஸ்டீவ் வாக் இணை 6-வது விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 30 ஆண்டு கால சாதனையை பர்ன்ஸ்-ஹெட் ஜோடி முறியடித்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 87 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் குவித்துள்ளது. ஜோ பர்ன்ஸ் 172 ரன்களுடனும் (243 பந்து, 26 பவுண்டரி), குர்டிஸ் பேட்டர்சன் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

ஹியூக்சுக்கு அர்ப்பணிப்பு

“தனது முதல் சதத்தை எட்டியதும் உணர்ச்சி வசப்பட்ட 25 வயதான ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இந்த சதத்தை பந்து தாக்கி மரணம் அடைந்த சக நாட்டு வீரர் பிலிப் ஹூயூக்சுக்கு அர்ப்பணிப்பதாக கண்ணீர் மல்க கூறினார்”


Next Story