ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ‘பவுன்சர்’ பந்து தாக்கி நிலைகுலைந்து விழுந்த இலங்கை கிரிக்கெட் வீரர்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ‘பவுன்சர்’ பந்து தாக்கி நிலைகுலைந்து விழுந்த இலங்கை கிரிக்கெட் வீரர்
x
தினத்தந்தி 2 Feb 2019 10:34 PM GMT (Updated: 2 Feb 2019 10:34 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ‘பவுன்சர்’ பந்து தாக்கி இலங்கை வீரர் கருணாரத்னே மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்தார்.

கான்பெர்ரா,

கான்பெர்ராவில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பவுலர் கம்மின்ஸ் வீசிய ‘பவுன்சர்’ பந்து தாக்கி இலங்கை வீரர் கருணாரத்னே மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்தார்.

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 384 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ பர்ன்ஸ் (172 ரன்), குர்டிஸ் பேட்டர்சன் (25 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஜோ பர்ன்ஸ் (180 ரன்) சிறிது நேரத்தில் வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து பேட்டர்சனும், கேப்டன் டிம் பெய்னும் இணைந்து அணியின் ஸ்கோரை 500 ரன்களை கடக்க வைத்தனர். அபாரமாக ஆடிய 25 வயதான பேட்டர்சன் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர், முதல் நாளில் சந்தித்த முதல் பந்திலேயே கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை அருகில் நின்ற திரிமன்னே தவற விட்டார். அந்த பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சதமாக மாற்றி விட்டார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 132 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பேட்டர்சன் 114 ரன்களுடனும் (192 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்), டிம் பெய்ன் 45 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.

நேற்றைய தினம், இலங்கை தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே, ‘பவுன்சர்’ பந்து தாக்கி காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 31-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசினார். இதன் 4-வது பந்தை அவர் பவுன்சராக வீசினார். மணிக்கு 142.5 கிலோ மீட்டர் வேகத்தில் எகிறிய அந்த பந்தை தவிர்ப்பதற்காக கருணாரத்னே முன்பக்கமாக தலையை குனிய முயற்சித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட சற்று உயரம் குறைந்து வந்த அந்த பந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது தோள்பட்டையை தாக்கி, அதன் பிறகு ஹெல்மெட்டோடு கழுத்து பகுதியில் வேகமாக பட்டு தெறித்தது.

பந்து தாக்கியதும் நிலைகுலைந்த கருணாரத்னே அப்படியே மைதானத்தில் சாய்ந்து விழுந்தார். ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் இதே போல் ‘பவுன்சர்’ பந்து தாக்கி மரணம் அடைந்த சோக வடு இன்னும் மறையாத நிலையில், மறுபடியும் அதே போல் ‘பவுன்சர்’ பந்து பதம் பார்த்ததும் பதறியடித்துக் கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் ஓடி வந்து அவருக்கு உதவினர். இரு நாட்டு அணிகளின் மருத்துவர்களும் களத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சுயநினைவுடன் இருந்தாலும், ஒரு வித மிரட்சியுடன் காணப்பட்ட கருணாரத்னே கழுத்தில் அதிக வலி இருப்பதாக கூறினார்.

இதையடுத்து சிறிய ரக வாகனம் மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அவரை ஸ்டிரெச்சரில் தூக்கி வைத்து வாகனத்தில் வெளியே அழைத்து சென்றனர். அதன் பிறகு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ‘ஸ்கேன்’ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பயப்படும் அளவுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று டாக்டர்கள் கூறிய பிறகு வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சில மணி நேர சிகிச்சைக்கு பிறகே அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் ஆட்டம் 15 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. 46 ரன்களுடன் (86 பந்து, 5 பவுண்டரி) பாதியிலேயே வெளியேறிய 30 வயதான கருணாரத்னே இன்று களம் இறங்குவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அது பற்றிய தகவல் 3-வது நாள் ஆட்டத்திற்கு முன்பு தெரிவிக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Next Story