பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி ‘திரில்’ வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி ‘திரில்’ வெற்றி
x
தினத்தந்தி 2 Feb 2019 10:45 PM GMT (Updated: 2 Feb 2019 11:29 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

கேப்டவுன்,

பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் முதலாவது ஆட்டம் கேப்டவுனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. ரீஜா ஹென்ரிக்ஸ் 41 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 74 ரன்னும், கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்னும் விளாசினர்.

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களே எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 6 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை (சோயிப் மாலிக் 49 ரன்) இழந்ததுடன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் வெற்றிகரமாக இலக்கை விரட்டி பிடித்து (சேசிங்) சாதனை படைத்து இருந்த பாகிஸ்தான் அணியின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது.

10 ரன்னுடன், 4 கேட்ச் மற்றும் 2 ரன்-அவுட் செய்த தென்ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கிரிக்கெட் வரலாற்றில் பீல்டிங்குக்காக ஒரு வீரர் ஆட்டநாயகன் விருது பெறுவது அபூர்வமானதாகும். 20 ஓவர் போட்டியில் 10 ரன்களுக்கு மேல் எடுக்காமலும், ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமலும் வீரர் ஒருவர் ஆட்டநாயகன் விருதை பெறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டில் சிட்னியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் பிராக்கென் (4-1-16-0) சிக்கனமாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்ததற்காக ஆட்டநாயகன் விருது பெற்று இருந்தது நினைவு கூரத்தக்கது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அணியை டேவிட் மில்லர் வழிநடத்த உள்ளார்.


Next Story