2-வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது வெஸ்ட் இண்டீஸ்


2-வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது வெஸ்ட் இண்டீஸ்
x
தினத்தந்தி 3 Feb 2019 11:16 PM GMT (Updated: 2019-02-04T04:46:02+05:30)

ஆன்டிகுவாவில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தை ஊதித்தள்ளியது.

ஆன்டிகுவா,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 31-ந்தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 187 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 306 ரன்களும் எடுத்தன. 119 ரன்கள் பின்தங்கிய நிலையில் 3-வது நாளான நேற்று முன்தினம் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 42.1 ஓவர்களில் 132 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 24 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் கெமார் ரோச், கேப்டன் ஜாசன் ஹோல்டர் தலா 4 விக்கெட்டுகளும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 14 ரன்கள் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி 2.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. ஏற்கனவே முதலாவது டெஸ்டில் 381 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததால் இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி வசப்படுத்தியது. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஒன்றில் 2 டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறுவது 1998-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

வெற்றிக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூறுகையில், ‘சக வீரர் அல்ஜாரி ஜோசப்பின் தாயார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார் என்ற தகவல் நேற்று முன்தினம் காலையில் கிடைத்தது. இதனால் ஜோசப் அழுதுகொண்டே இருந்தார். அவரை தேற்றுவதற்கே கடினமாக இருந்தது. ஆனாலும் போட்டியில் தொடர்ந்து பங்கேற்றார். தாயார் மறைந்த துக்கத்திலும் ஜோசப் களத்தில் முழு உத்வேகத்துடன் ஆடினார். இத்தகைய கடினமான நேரத்தில் எல்லா வீரர்களாலும் இது போன்று செயல்பட முடியாது. அவருக்கு எனது பாராட்டுகள். இந்த வெற்றியை அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சமர்ப்பிக்கிறேன்.’ என்றார்.

தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘நாங்கள் ஆடிய விதம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. அவர்கள் எங்களை முழுமையாக தோற்கடித்துவிட்டனர் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். இந்த தோல்வியில் இருந்து நாங்கள் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக உயர்தரமான பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் எப்படி பேட்டிங் செய்தனர் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது.


Next Story