நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி: தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது


நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி: தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது
x
தினத்தந்தி 3 Feb 2019 11:46 PM GMT (Updated: 3 Feb 2019 11:50 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

வெலிங்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், கலீல் அகமது நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டோனி, விஜய் சங்கர், முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் முதுகுவலியால் அவதிப்படும் மார்ட்டின் கப்திலுக்கு பதிலாக காலின் முன்ரோ இடம் பிடித்தார்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா, ஈரப்பதமான ஆடுகளத்தில் தொடக்கத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்று தெரிந்திருந்தும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடினமான சூழலில் இந்திய பேட்டிங் பலத்தை சோதித்து பார்ப்பதற்காக அணி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இந்த முடிவை எடுத்தார்.

எதிர்பார்த்தது போலவே நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட்டும், மேட் ஹென்றியும் ஸ்விங் தாக்குதலில் இந்தியாவுக்கு ‘கிலி’ ஏற்படுத்தினர். இந்திய தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா (2 ரன், 16 பந்து), ஹென்றி வீசிய ‘அவுட்ஸ்விங்’கரில் கிளன் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் (6 ரன்), பவுல்ட்டின் ஓவரில் எழும்பி வந்த பந்தை ‘அப்பர் கட்’ ஷாட் அடித்த போது ‘தேர்டுமேன்’ பகுதியில் நின்ற ஹென்றியிடம் சிக்கினார். இந்த தொடரில் தவான், பவுல்ட்டின் பந்து வீச்சில் ஆட்டம் இழப்பது இது 4-வது முறையாகும். அடுத்து வந்த சுப்மான் கில் (7 ரன்), விக்கெட் கீப்பர் டோனி (1 ரன்) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. டோனிக்கு, பவுல்ட் வீசிய பந்து ஆப்-ஸ்டம்பை பதம் பார்த்தது.

அப்போது இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை (9.3 ஓவர்) இழந்து ஊசலாடியது. 2015-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி முதல் 10 ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை தாரை வார்ப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

முந்தைய ஆட்டத்தில் 92 ரன்னில் சுருண்டது போன்ற நிலைமை வந்துவிடுமோ என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் உதிக்காமல் இல்லை. இந்த நெருக்கடியான கட்டத்தில் 5-வது விக்கெட்டுக்கு அம்பத்தி ராயுடும், ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கரும் இணைந்து அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டெடுத்தனர். நியூசிலாந்தின் பவுலிங்கை சிரமமின்றி எதிர்கொண்ட சங்கர் அவசரப்படாமல் ஏதுவான பந்துகளில் மட்டும் ரன் எடுத்தார். இதனால் ரன்வேகம் மந்தமாகவே நகர்ந்தது. இந்திய அணி 18.1 ஓவர்களில் 50 ரன்களை தொட்டது. அதன் பிறகு இருவரும் ரன் சேகரிப்பில் கொஞ்சம் வேகம் காட்டினர்.

அணியின் ஸ்கோர் 116 ரன்களாக உயர்ந்த போது (31.5 ஓவர்) துரதிர்ஷ்டவசமாக விஜய் சங்கர் (45 ரன், 64 பந்து, 4 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். அதுவும் சில அடி தூரம் ஓடி விட்டு வேண்டாம் என்று விஜய் சங்கர் கூறிய போதிலும், எதிர்முனையில் நின்ற அம்பத்தி ராயுடு ஓடி வந்து விட்டதால் அவருக்காக சங்கர் தனது விக்கெட்டை தியாகம் செய்ய வேண்டியதாகி விட்டது. இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்தது சிறப்பம்சமாகும்.

அவருக்கு பிறகு இறங்கிய கேதர் ஜாதவும், அம்பத்தி ராயுடுக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். அபாரமாக ஆடி 10-வது அரைசதத்தை எட்டிய அம்பத்தி ராயுடு, காலின் முன்ரோவின் ஓவரில் இரண்டு சிக்சர்களை விரட்டியடித்து அசத்தினார். ஆபத்பாந்தவனாக அணிக்கு கைகொடுத்த அம்பத்தி ராயுடு 90 ரன்களில் (113 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இறுதி கட்டத்தில் பட்டைய கிளப்பியதோடு அணி சவாலான ஸ்கோர் எட்டுவதற்கும் உதவி புரிந்தார். சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லேவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்களை பறக்க விட்டு குதூகலப்படுத்திய பாண்ட்யா, ஜேம்ஸ் நீஷத்தின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். தொடர்ந்து அதே ஓவரில் பாண்ட்யா 45 ரன்களில் (22 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். இதற்கிடையே கேதர் ஜாதவ் 34 ரன்களில் (45 பந்து, 3 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

முடிவில் இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கடைசி 7 ஓவர்களில் நமது பேட்ஸ்மேன்கள் 66 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி 7 பவுலர்களை பயன்படுத்திய போதிலும், இந்திய மிடில் வரிசை ஆட்டக்காரர்கள் பிரமாதப்படுத்தி விட்டனர். மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 253 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆரம்பத்திலேயே இரட்டை செக் வைத்தார். அவரது பந்து வீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹென்றி நிகோல்ஸ் (8 ரன்), காலின் முன்ரோ (24 ரன்) இருவரும் வெளியேற்றப்பட்டனர். அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராஸ் டெய்லரை (1 ரன்) ஹர்திக் பாண்ட்யா காலி செய்தார். அந்த சமயம் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 38 ரன்களுடன் திணறியது. கேப்டன் கேன் வில்லியம்சனும், விக்கெட் கீப்பர் டாம் லாதமும் 4-வது விக்கெட்டுக்கு இணைந்து ஓரளவு சமாளித்தனர். இவர்கள் 24-வது ஓவரில் அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு கொண்டு வந்தனர். இந்த கூட்டணியை பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் உடைத்தார். அவரது பந்து வீச்சில் வில்லியம்சன் (39 ரன், 73 பந்து, 3 பவுண்டரி) பந்தை தூக்கியடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.

மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், நியூலாந்து பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தார். அவரது பவுலிங்கில் டாம் லாதம் (37 ரன்) வீழ்ந்தார்.

இதற்கு மத்தியில் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் சிறிது நேரம் அச்சுறுத்தினார். அதிரடி காட்டிய அவரை விக்கெட் கீப்பர் டோனி சாமர்த்தியமாக செயல்பட்டு சாய்த்தார். அதாவது கேதர் ஜாதவின் பந்து வீச்சில் நீஷம் முட்டி போட்டு அடிக்க முயற்சித்த போது பந்து பேட்டில் படவில்லை. இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். நடுவர் அவுட் வழங்கவில்லை. அப்போது நீஷம், கிரீசை விட்டு சில அடி தூரம் வெளியே நின்றார். அவர் பந்து விக்கெட் கீப்பர் டோனியின் பக்கம் சென்றதை கவனிக்கவில்லை. டோனி பந்தை ஸ்டம்ப் மீது தூக்கி எறிந்து அவரை ரன்-அவுட் செய்தார். நீஷம் 44 ரன்களில் (32 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்-அவுட் ஆனதும், ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது.

அந்த அணி 44.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு ஆட்டநாயகன் விருதையும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (4 ஆட்டத்தில் 9 விக்கெட் வீழ்த்தினார்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. முதல் 3 ஆட்டங்களில் இந்தியாவும், 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றிருந்தன.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் வருகிற 6-ந்தேதி வெலிங்டனில் நடக்கிறது.

நியூசிலாந்து மண்ணில் சிறந்த செயல்பாடு

* இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் 11, 87, 62, 7, 2 ரன்கள் வீதம் எடுத்துள்ளார். தொடர்ச்சியாக 10 தொடர்களுக்கு பிறகு அவர் இந்த தொடரில் தான் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அது மட்டுமின்றி அவர் நியூசிலாந்து மண்ணில் இதுவரை சதம் கண்டதில்லை.

* இந்திய அணி 1967-ம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. அங்கு ஒரு தொடரில் இந்திய அணி 4 ஆட்டங்களில் வெற்றி காண்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 1967-68-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 2009-ம் ஆண்டு ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா வென்றதே அங்கு சிறந்த செயல்பாடாக இருந்தது.

* நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒரு நாள் தொடர் ஒன்றில் 4 ஆட்டங்களில் தோற்பது இது 4-வது நிகழ்வாகும். கடைசியாக 2005-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 0-5 என்ற கணக்கில் இழந்திருந்தது.




Next Story