ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி 312 ரன்னில் ‘ஆல்-அவுட்’


ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி 312 ரன்னில் ‘ஆல்-அவுட்’
x
தினத்தந்தி 4 Feb 2019 11:00 PM GMT (Updated: 4 Feb 2019 9:52 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 312 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

நாக்பூர்,

ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் விதர்பா-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து இருந்தது. அக்‌ஷய் கார்னிவார் 31 ரன்னுடனும், அக்‌ஷய் வாக்ஹரி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அக்‌ஷய் கார்னிவார், அக்‌ஷய் வாக்ஹரி ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். அணியின் ஸ்கோர் 274 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. நிலைத்து நின்று ஆடிய அக்‌ஷய் வாக்ஹரி 34 ரன் எடுத்த நிலையில் சகாரியா பந்து வீச்சில் போல்டு ஆனார். இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர்.

அதன் பிறகு களம் கண்ட உமேஷ் யாதவ் 13 ரன்னிலும், குர்பானி 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். விதர்பா அணி முதல் இன்னிங்சில் 120.2 ஓவர்களில் 312 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அக்‌ஷய் கார்னிவார் 160 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சவுராஷ்டிரா அணி தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டும், சகாரியா, கம்லேஷ் மக்வானா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்னெல் பட்டேல் நிலைத்து நின்று ஆடினார். அவருடன் இணைந்து ஆடிய ஹர்விக் தேசாய் 10 ரன்னிலும், விஸ்வராஜ் ஜடேஜா 18 ரன்னும், புஜாரா 1 ரன்னிலும், அர்பித் வசவதா 13 ரன்னிலும், ஷெல்டன் ஜாக்சன் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 59 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்னெல் பட்டேல் 160 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 87 ரன்னும், மங்கட் 39 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 16 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். விதர்பா அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதித்யா சர்வாதே 3 விக்கெட்டும், அக்‌ஷய் வாக்ஹரி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.


Next Story