கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது + "||" + Last Test against Sri Lanka: Australia team victory - The sequel was also captured

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
கான்பெர்ரா,

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 215 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனை அடுத்து 319 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது.


பின்னர் 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்து இருந்தது. திமுத் கருணாரத்னே 8 ரன்னுடனும், திரிமன்னே 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணியினர், ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 51 ஓவர்களில் 149 ரன்னில் அடங்கி போனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 42 ரன்னும், திரிமன்னே 30 ரன்னும், டிக்வெல்லா 27 ரன்னும், சமிகா கருணாரத்னே 22 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். பவுன்சர் பந்து வீச்சில் லேசான காயம் அடைந்த திமுத் கருணாரத்னே 8 ரன்னிலும், குசல் பெரேரா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் வேகப்பந்து விச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. கடந்த ஆண்டு (2018) மார்ச் மாதம் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய பிறகு ஆஸ்திரேலிய அணி வெல்லும் முதல் போட்டி தொடர் இதுவாகும். அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இலங்கை அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை என்ற சோகம் தொடருகிறது.

வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் அளித்த பேட்டியில், ‘இந்த சீசனில் எங்கள் அணியினர் கடுமையாக உழைத்தனர். அதற்கு தகுந்த பலனாக இந்த வெற்றி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணி வலுப்பெற தொடங்கி இருக்கிறது. பிட்ச் அனுகூலமாக இல்லாவிட்டாலும் எங்கள் அணியினரின் பந்து வீச்சு அருமையாக இருந்தது. இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை அளித்து இருக்கிறது. இதனை சிறப்பாக முன்னெடுத்த செல்ல முயற்சிப்போம்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் கருத்து தெரிவிக்கையில், ‘எல்லா துறைகளிலும் எங்கள் அணி வீழ்த்தப்பட்டு இருக்கிறது. எல்லா பெருமையும் ஆஸ்திரேலிய அணியையே சாரும். அவர்கள் இந்த போட்டி தொடர் முழுவதும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக கடந்த 6 மாதங்களாக எங்கள் அணியில் ஆடும் லெவனுக்கு சமச்சீரான கலவையில் வீரர் கள் அமையவில்லை’ என்றார்.