ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேற்றம் - விராட்கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு


ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேற்றம் - விராட்கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2019 11:30 PM GMT (Updated: 4 Feb 2019 10:11 PM GMT)

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறியது.

துபாய்,

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முறையே இந்திய அணி கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அணிகள் தரவரிசையில் இந்திய அணி (122 புள்ளிகள்) 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை அடுத்தடுத்து வென்றதன் மூலம் இந்திய அணி ஒரு இடம் ஏற்றம் கண்டுள்ளது. இங்கிலாந்து அணி (126 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி (111 புள்ளிகள்) 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி (111 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் (102 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (100 புள்ளிகள்), வங்காளதேசம் (93 புள்ளிகள்), இலங்கை (78 புள்ளிகள்), வெஸ்ட்இண்டீஸ் (72 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் (67 புள்ளிகள்), ஜிம்பாப்வே (52 புள்ளிகள்), அயர்லாந்து (39 புள்ளிகள்), ஸ்காட்லாந்து (33 புள்ளிகள்), ஐக்கிய அரபு அமீரகம் (15 புள்ளிகள்), நேபாளம் (15 புள்ளிகள்) அணிகள் முறையே 5 முதல் 15 இடங்களை பெற்றுள்ளன.

பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (887 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் ரோகித் சர்மா (854 புள்ளிகள்) 2-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் (821 புள்ளிகள்), 3-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜோரூட் (807 புள்ளிகள்) 4-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (801 புள்ளிகள்) 5-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் (791 புள்ளிகள்) 6-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாய் ஹோப் (780 புள்ளிகள்) 7-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர்.

தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் (758 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் (755 புள்ளிகள்) 2 இடம் முன்னேறி 9-வது இடத்தையும், இந்திய வீரர் ஷிகர் தவான் (744 புள்ளிகள்) 2 இடம் சரிவு கண்டு 10-வது இடத்தையும் பிடித்தனர். தென்ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 3 இடம் முன்னேறி 13-வது இடத்தையும், பாகிஸ்தான் வீரர் இமாம் உல்-ஹக் 9 இடம் முன்னேற்றம் கண்டு 16-வது இடத்தையும், இந்திய வீரர் டோனி 3 இடம் முன்னேறி 17-வது இடத்தையும், இந்திய வீரர் கேதர் ஜாதவ் 8 இடம் முன்னேறி 35-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா (808 புள்ளிகள்) முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் (788 புள்ளிகள்) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் 12 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (732 புள்ளிகள்) 7 இடம் முன்னேறி 3-வது இடத்தையும், இந்திய வீரர் குல்தீப் யாதவ் (719 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தையும், இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் (709 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 5-வது இடத்தையும், வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் (695 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 6-வது இடத்தையும், தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா (688 புள்ளிகள்) 3 இடம் சரிவு கண்டு 7-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் (683 புள்ளிகள்) 2 இடம் இறக்கம் கண்டு 8-வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் ரஹ்மான் (679 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 9-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் (665 புள்ளிகள்) ஒரு இடம் இறங்கி 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 6 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பெற்றுள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் (353 புள்ளிகள்), வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (352 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி (337 புள்ளிகள்), பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் (296 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் அப்படியே தொடருகின்றனர். இங்கிலாந்து வீரர் மொயீன் அலி ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.


Next Story