டெஸ்ட் தரவரிசையில் கம்மின்ஸ், ஹோல்டர் முன்னேற்றம்


டெஸ்ட் தரவரிசையில் கம்மின்ஸ், ஹோல்டர் முன்னேற்றம்
x
தினத்தந்தி 5 Feb 2019 10:15 PM GMT (Updated: 5 Feb 2019 7:06 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசையில் கம்மின்ஸ், ஹோல்டர் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா (882 புள்ளி) முதலிடம் வகிக்கிறார். கான்பெர்ராவில் நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (878 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் குறைந்து 3-வது இடத்துக்கு இறங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜாசன் ஹோல்டர் 4 இடம் உயர்ந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5-வது இடத்தில் இருக்கிறார். கான்பெர்ரா டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 10 இடங்கள் எகிறி 15-வது இடத்துக்கு வந்துள்ளார்.

பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-4 இடங்களில் மாற்றம் இல்லை. இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 2-வது இடத்திலும், இந்தியாவின் புஜாரா 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 4-வது இடத்திலும் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சொதப்பிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 5-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.


Next Story