கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி: வெலிங்டனில் இன்று நடக்கிறது + "||" + India-New Zealand first T20 match: Wellington Today start

இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி: வெலிங்டனில் இன்று நடக்கிறது

இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி: வெலிங்டனில் இன்று நடக்கிறது
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது.
வெலிங்டன்,

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.


இதன்படி இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் 20 ஓவர் தொடருக்கு இந்திய அணியை முழுமையாக ரோகித் சர்மா வழிநடத்த உள்ளார்.

ஒரு நாள் தொடரை சொந்தமாக்கிய உற்சாகத்தில் புது தெம்புடன் களம் இறங்கும் இந்திய அணி 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டும். இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், 20 ஓவர் போட்டிக்கான அணியில் அங்கம் வகிக்கிறார். டோனியும் இருப்பதால், அவர் ஒரு வீரராக களம் இறங்குவார். உலக கோப்பை போட்டிக்கு இடத்தை தக்கவைக்க இந்த தொடரில் அவர் சாதிக்க வேண்டியது முக்கியமாகும். இதே போல் 3-வது வரிசையில் 19 வயதான சுப்மான கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. வாய்ப்பு பெற்ற கடைசி இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தை தாண்டாத சுப்மான் கில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும் (இந்திய மண்ணில் கிடைத்தவை), 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. நியூசிலாந்தில் ஆடிய இரண்டு 20 ஓவர் போட்டியிலும் தோல்வியே மிஞ்சியது. அதனால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இங்கு முதலாவது வெற்றியை பதிவு செய்யும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். அது மட்டுமின்றி இந்திய அணி தொடர்ச்சியாக பத்து 20 ஓவர் போட்டித் தொடர்களில் தொடரை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்கவைக்க வேண்டும் என்றால் எல்லா வீரர்களும் முழு திறமையை ஒருங்கிணைந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்திய வீரர் ஷிகர் தவான் கூறுகையில், ‘பயிற்சியார் ரவிசாஸ்திரி சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு தேவை என்று சொல்லி இருந்தார். நாங்களும் மனிதர்கள் தானே. எங்களது உடலுக்கும் ஓய்வு கொஞ்சம் அவசியம் தான். இப்போது 20 ஓவர் தொடரையும் வெல்லும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். தாயகம் திரும்பி ஆஸ்திரேலியாவை சந்திப்பதற்கு இந்த வெற்றி உத்வேகம் முக்கியமானதாகும்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘ரிஷாப் பான்ட் ஆக்ரோஷமாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன். இந்திய அணியின் சொத்து. மிக குறுகிய நேரத்தில் ஆட்டத்தை எதிரணியிடம் இருந்து தட்டிப்பறிக்க கூடியவர். இந்த வாய்ப்பை அவர் கெட்டியாக பிடித்துக் கொள்வார் என்று நம்புகிறேன்’ என்றார்.

ஒரு நாள் தொடரை பறிகொடுத்த நியூசிலாந்து வீரர்கள், 20 ஓவர் போட்டியில் பதிலடி கொடுக்க தீவிரம் காட்டுவார்கள். காயத்தால் அவதிப்படும் மார்ட்டின் கப்தில் விலகி விட்டதால், கேப்டன் வில்லியம்சன் தொடக்க ஆட்டக்காரராக அடியெடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்விங் தாக்குதலில் மிரட்டிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் டிம் சவுதிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படலாம்.

20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி எப்போதும் வலுமிக்கது. அதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமையும் என்று நம்பலாம்.

வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவர் போட்டிகளில் 9 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்றதும் அடங்கும். அதே நேரத்தில், இந்த ஆடுகளத்தன்மையை கணிப்பது மிகவும் கடினம். கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து 196 ரன்கள் குவித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது பேட்டிங்கின் போது பனிப்பொழிவின் தாக்கம் இருக்கக்கூடும்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக், டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா அல்லது கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ்.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் முன்ரோ, டிம் செய்பெர்ட் (விக்கெட் கீப்பர்), ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட் ஹோம், மிட்செல் சான்ட்னெர், ஸ்காட் குஜ்ஜெலின், பிரேஸ்வெல், லோக்கி பெர்குசன் அல்லது டிம் சவுதி, சோதி.

இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்திய பெண்கள் அணியும்...

இந்திய பெண்கள் அணியும் தற்போது நியூசிலாந்தில் தான் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வசப்படுத்திய இந்திய பெண்கள் அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி இதே வெலிங்டனில் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் செயல்படுவார். மூத்த வீராங்கனை மிதாலிராஜிக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். இது இந்திய பெண்கள் அணியின் 99-வது சர்வதேச 20 ஓவர் போட்டியாகும்.