கிரிக்கெட்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஏமாற்றம் + "||" + The first T20 cricket: Indian women's team is disappointed

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தது.
வெலிங்டன், 

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியை போல் இந்திய பெண்கள் அணியும் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரில் முதலாவது ஆட்டம் வெலிங்டனில் நேற்று நடந்தது. இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் 7 ரன்னிலும், அடுத்து வந்த கெய்ட்லின் குர்ரே 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் 47 ரன்னாக இருந்தது.

3-வது விக்கெட்டுக்கு கேப்டன் சட்டர்த்வெய்ட், சோபி டேவினுடன் இணைந்தார். இந்த ஜோடி அடித்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 15.3 ஓவர்களில் 116 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. சோபி டேவின் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன்களும், சட்டர்த்வெய்ட் 33 ரன்களும் (27 பந்து, 4 பவுண்டரி) எடுத்து கேட்ச் ஆனார்கள்.

20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் கேட்டி மார்ட்டின் 27 ரன்னுடனும், பிரான்சிஸ் மெக்காய் 10 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

அடுத்து களம் புகுந்த இந்திய அணியின் தொடக்க வீராங்கனை பிரியா பூனியா 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதைத்தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனாவுடன் கைகோர்த்தார். இருவரும் நேர்த்தியாக விளையாடி அணிக்கு வலுவூட்டினர். அணியின் ஸ்கோர் 11.3 ஓவர்களில் 102 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது.

24 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்த மந்தனா 34 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அமெலி கெர் பந்துவீச்சில் எல்லைக்கோடு அருகே ஹன்னா ரோவிடம் கேட்ச் ஆகிப் போனார். 20 ஓவர் போட்டியில் கடந்த ஆண்டு (2018) நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 25 பந்துகளில் அரைசதத்தை எட்டி, குறைந்த பந்தில் அரை சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்த மந்தனா தனது சொந்த சாதனையை நேற்று தகர்த்து புதிய சாதனை படைத்தார்.

மந்தனா ஆட்டம் இழந்ததும் இந்திய விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் சரிந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 39 ரன்னிலும் (33 பந்து, 6 பவுண்டரி), ஹேமலதா 3 ரன்னிலும், அனுஜா பாட்டில் ரன் எதுவும் எடுக்காமலும், அருந்ததி ரெட்டி 2 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 17 ரன்னிலும், தனியா பாட்டியா 1 ரன்னிலும், ராதா யாதவ் 3 ரன்னிலும், தீப்தி ஷர்மா 5 ரன்னிலும் நடையை கட்டினர்.

இந்திய அணி 19.1 ஓவர்களில் 136 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இந்திய அணி கடைசி 34 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை தாரை வார்த்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் லீ தஹூ 3 விக்கெட்டும், அமெலி கெர், காஸ்பெரெக் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் நாளை நடக்கிறது.

‘கடைசி ஓவர் வரை நான் விளையாடி இருக்க வேண்டும்’ - மந்தனா

தோல்விக்கு பிறகு இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் மந்தனா அளித்த பேட்டியில், ‘நானும், ஜெமிமாவும் விக்கெட்டை இழந்தது அணிக்கு பின்னடைவாக அமைந்து விட்டது. 20 ஓவர் போட்டியில் அடுத்தடுத்து 2 பேர் ஆட்டம் இழந்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடும் போது, ரன் ரேட்டை 7 அல்லது 8-க்கு மேல் வைத்து இருக்க வேண்டும். அடுத்த முறை சிறப்பாக செயல்பட திட்டமிட வேண்டும். இந்த ஆட்டத்தில் எங்களது திட்டத்துக்கு பலன் கிட்டவில்லை. நான் கடைசி ஓவர் வரை நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமானதாகும். அது தான் வெற்றி பெற சிறந்த வாய்ப்பாகும். குறைந்தது 18 ஓவர்கள் வரை நிலைத்து நின்று விட்டால் அணி விக்கெட்டுகள் விரைவில் சரியும் நிலை ஏற்படாது. டாப்-4 வீராங்கனைகள் எஞ்சி இருந்தால் பின்னர் வரும் ஓவரை சமாளித்து கொள்ள முடியும்’ என்றார்.