கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி மோசமான தோல்வி + "||" + T20 against New Zealand: The worst defeat of the Indian team

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி மோசமான தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி மோசமான தோல்வி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
வெலிங்டன், 

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் பாண்ட்யா சகோதரர்கள் இடம் பிடித்தனர். தினேஷ் கார்த்திக் நீடித்ததால், சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா முதலில் நியூசிலாந்தை பேட் செய்ய பணித்தார்.

இதன்படி காலின் முன்ரோவும், விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டும் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பேட்டிங்குக்கு உகந்த அதே சமயம் சிறிய மைதானமான இங்கு முன்ரோவும், டிம் செய்பெர்ட்டும் அதிரடியாக மட்டையை சுழட்டினர். செய்பெர்ட் 17 ரன்னில் இருந்த போது கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டோனி நழுவ விட்டார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை தெறிக்கவிட்ட செய்பெர்ட், எல்லோருடைய பந்து வீச்சையும் நொறுக்கித்தள்ளினார். புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, குருணல் பாண்ட்யாவின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்கள் பறந்தன. இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் (8.2 ஓவர்) திரட்டி வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தனர். காலின் முன்ரோ 34 ரன்னில் (2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.

ரன்மழை பொழிந்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த செய்பெர்ட் 71 ரன்னில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் கோட்டை விட்டார். ஒரு வழியாக அவரது வாணவேடிக்கையை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது முடிவுக்கு கொண்டு வந்தார். செய்பெர்ட் 84 ரன்களில் (43 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அதிரடி காட்டியதால் ரன்ரேட் இறுதி வரை 10 ரன்களுக்கு குறையாமல் நகர்ந்தது. இந்திய பவுலர்கள் துல்லியமாக (லைன் அன்ட் லென்த்) அளவில் பந்து வீச முடியாமல் தடுமாறினர். அத்துடன் சில கேட்ச்களையும் நழுவ விட்டது நியூசிலாந்துக்கு சாதகமாக மாறியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் 200 ரன்களை கடந்த முதல் அணி என்ற சிறப்பை நியூசிலாந்து பெற்றது. மேலும் இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடந்த ஆட்டத்தில் 196 ரன்கள் எடுத்ததே இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் சிறந்த ஸ்கோராக இருந்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். 2-வது ஓவரில் தவான் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டினார். அடுத்த ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா (1 ரன்) டிம் சவுதி வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்துக்கு இரையானார். 2-வது விக்கெட்டுக்கு வந்த விஜய் சங்கர், குஜ்ஜெலினின் பந்து வீச்சில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். ஆனால் இந்த உற்சாகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஷிகர் தவான் 29 ரன்களில் (18 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) பெர்குசனின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த ரிஷாப் பான்ட் 4 ரன்னிலும், விஜய் சங்கர் 27 ரன்னிலும் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர்.

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் டோனி ஒரு புறம் போராட, மறுமுனையில் வந்த பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பினர். அதிகபட்சமாக டோனி 39 ரன்கள் (31 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில், 19-வது ஓவரில் ஆட்டம் இழந்தார். முடிவில் இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிம் செய்பெர்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

ரன்களை வாரி வழங்கிய இந்திய தொடக்க பவுலர்கள்

* இந்த ஆட்டத்தில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் பணிந்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ரன் வித்தியாசம் அடிப்படையில் இந்தியாவின் மோசமான தோல்வி இது தான். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மோசமானதாக இருந்தது.

* இந்திய தொடக்க பந்து வீச்சாளர்கள் கலீல் அகமதுவும் (48 ரன்), புவனேஷ்வர்குமாரும் (47 ரன்) கூட்டாக 95 ரன்களை வாரி வழங்கினர். 20 ஓவர் போட்டியில் இந்திய தொடக்க பவுலர்கள் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்கள் இது தான். இந்த வகையில் முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் இணைந்து 91 ரன்களை (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2016-ம் ஆண்டு) வழங்கியதே முந்தைய அதிகபட்சமாகும்.

* இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர்களில் 51 ரன்களை வாரி இறைத்தார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் பாண்ட்யா 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.

* நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி இதுவரை ஒன்பது 20 ஓவர் போட்டிகளில் மோதி அதில் 7-ல் தோல்வியை சந்தித்து இருக்கிறது. 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, இந்தியாவின் வெற்றி-தோல்வி சாதனை நியூசிலாந்துக்கு எதிராகத்தான் மோசமாக இருக்கிறது. இதில் நியூசிலாந்து மண்ணில் இந்தியா இன்னும் வெற்றிக் கணக்கை (3 தோல்வி)தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்த ‘வீறுநடை’ முடிவுக்கு வந்தது.

கேப்டன்கள் கருத்து

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறைகளிலும் நாங்கள் சோடை போய் விட்டோம். இது சிறிய மைதானமாக இருந்த போதிலும் 200 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடிப்பது (சேசிங்) எளிதல்ல என்பதை அறிவோம். விக்கெட்டுகளை மளமளவென இழந்ததால் ஆட்டமும் கையை விட்டு போய் விட்டது.

எங்களால் எத்தகைய இலக்கையும் விரட்டிப்பிடிக்க முடியும். இது போன்ற பெரிய இலக்கை சேசிங் செய்த அனுபவம் எங்களுக்கு உண்டு. அதனால் தான் 8 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கினோம். ஆனால் பெரிய ஸ்கோரை நோக்கி ஆடும் போது, நல்ல பார்ட்னர்ஷிப் அமையாவிட்டால் சிக்கலாகி விடும். இன்றைய ஆட்டத்தில் வலுவான ஒரு பார்ட்னர்ஷிப் அவசியமாக இருந்தது. ஆனால் அதை செய்ய தவறி விட்டோம். அடுத்த போட்டி நடக்கும் ஆக்லாந்தில் சீதோஷ்ண நிலையை ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப ஆடுவோம்’ என்றார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘அற்புதமான செயல்பாடு. ஒவ்வொரு வீரர்களும் பங்களிப்பை அளித்தனர். எங்களுக்கு மனநிறைவை தந்த ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்தது. செய்பெர்ட்டும், முன்ரோவும் வியப்புக்குரிய வகையில் ஆடினர். அவர்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப் வலுவான ஸ்கோரை எட்ட உதவியது. தொடர் முழுவதும் இதே உத்வேகத்துடன் ஆடுவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.