இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு - ஸ்டார்க், மிட்செல் மார்சுக்கு இடமில்லை


இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு - ஸ்டார்க், மிட்செல் மார்சுக்கு இடமில்லை
x
தினத்தந்தி 7 Feb 2019 11:29 PM GMT (Updated: 7 Feb 2019 11:29 PM GMT)

இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஸ்டார்க், மிட்செல் மார்சுக்கு இடம் கிடைக்கவில்லை.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 20 ஓவர் போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்.24), பெங்களூரு (பிப்.27) ஆகிய நகரங்களிலும், ஒரு நாள் போட்டிகள் முறையே ஐதராபாத் (மார்ச் 2), நாக்பூர் (மார்ச் 5), ராஞ்சி (மார்ச் 8), மொகாலி (மார்ச் 10), டெல்லி (மார்ச் 13) ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம் பெறவில்லை. இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டின் போது இடது கை தோள்பட்டையில் காயத்தில் சிக்கிய அவருக்கு தசைநாரில் கிழிவு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

உள்ளூரில் நடந்த தொடரில் சோபிக்காத ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், மூத்த வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் ஆகியோர் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்கள். முதுகுவலி பாதிப்பில் இருந்து முழுமையாக மீளாத வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. சமீபத்தில் உள்ளூரில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய வீரர்களில் 11 பேர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ், அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால் குழந்தை பிறந்தவுடன் அணியுடன் தாமதமாக இணைந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டனாக ஆரோன் பிஞ்சும், துணை கேப்டன்களாக கம்மின்ஸ், அலெக்ஸ் காரி ஆகியோரும் செயல்படுவார்கள்.

ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், அலெக்ஸ் காரி, ஜாசன் பெரென்டோர்ப், நாதன் கவுல்டர்-நிலே, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஜெயே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டார்சி ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஜம்பா.


Next Story