நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது


நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 7 Feb 2019 11:44 PM GMT (Updated: 7 Feb 2019 11:44 PM GMT)

நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி இன்று இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் களம் இறங்குகிறது.

ஆக்லாந்து, 

நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இந்திய பந்து வீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பினர். ஷாட்பிட்ச்சாகவும், ஆப்- ஸ்டம்புக்கு வெளியேயும் அதிக அளவில் பந்துகளை வீசி ரன்களை வாரி வழங்கினர். ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவரான புவனேஷ்வர்குமார் 47 ரன்களை விட்டுக்கொடுத்து பெருத்த ஏமாற்றம் அளித்தார். பீல்டிங்கிலும் சில கேட்ச்சுகளை கோட்டை விட்டனர். இதே போல் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால், டோனியை (39 ரன்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை.

பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கடைசியாக ஆடிய மூன்று ஆட்டங்களில் (ஒரு நாள் போட்டியையும் சேர்த்து) முறையே 1, 2, 7 ரன் வீதம் எடுத்து தடுமாறியுள்ளார். அவர் பார்முக்கு திரும்புவது அவசியமாகும். அவர் இன்னும் 35 ரன்கள் எடுத்தால், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை மார்ட்டின் கப்திலிடம் இருந்து தட்டிப்பறித்து விடுவார்.

முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இந்த ஆட்டத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் நமது வீரர்கள் எழுச்சி பெறுவார்களா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இந்திய அணி கடைசியாக ஆடிய 10 இருபது ஓவர் தொடர்களை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

தொடக்க ஆட்டத்தில் 219 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள், இன்றைய ஆட்டத்திலும் அசத்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் செய்பெர்ட்டும், காலின் முன்ரோவும் வெலிங்டன் போட்டியில் ரன்மழை பொழிந்தனர். இவர்களை சீக்கிரம் வீழ்த்தாவிட்டால் நியூசிலாந்தின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தவது கடினம்.

பந்து வீச்சிலும் நியூசிலாந்து நம்பிக்கையுடன் உள்ளது. ஒரு நாள் தொடரை பறிகொடுத்த நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரை வெல்வதில் தீவிர முனைப்பு காட்டுகிறது. எனவே இந்திய அணி மிரட்டுமா அல்லது மிரளுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு நியூசிலாந்து அணி 17 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது. 2 ஆட்டம் ‘டை’ ஆனது.

5 முறை 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 243 ரன்கள் குவித்ததும், அந்த இலக்கை ஆஸ்திரேலியா 18.5 ஓவர்களில் விரட்டிப்பிடித்து சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இங்கு 20 ஓவர் போட்டியில் கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில் அல்லது விஜய் சங்கர், ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா அல்லது குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது அல்லது முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம் அல்லது காலின் டி கிரான்ட்ஹோம், சான்ட்னெர், ஸ்காட் குஜ்ஜெலின், டிம் சவுதி, சோதி, லோக்கி பெர்குசன்.

இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

பெண்கள் அணிக்கும்...

முன்னதாக இதே மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கி நடக்கும் இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையே 2-வது 20-வது ஓவர் போட்டி நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய பெண்கள் அணியும் வாழ்வா-சாவா நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. இந்திய மூத்த வீராங்கனை மிதாலி ராஜூக்கு ஆடும் லெவன் அணியில் இடம் வழங்கப்படுமா? என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.

Next Story