கிரிக்கெட்

2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி + "||" + 2nd T20 cricket: Indian women's team fail again

2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி

2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தது.
ஆக்லாந்து, 

இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 72 ரன்னும், மந்தனா 27 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன்னும் எடுத்து கேட்ச் ஆனார்கள். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. சுசி பேட்ஸ் 62 ரன்கள் (52 பந்து, 5 பவுண்டரி) விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் மான்சி ஜோஷி வீசினார். அதில் முதல் பந்தை கேட்டி மார்ட்டின் பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அடுத்து களம் கண்ட ஹன்னா ரோவ் 3-வது பந்தில் 2 ரன்னும், 4-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். காஸ்பெரெக் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன் பின்னர் கடைசி பந்தில் ஹன்னா ரோவ் ஒரு ரன் எடுத்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் நாளை நடக்கிறது.

தோல்வி குறித்து இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கூறும் போது ‘எங்கள் பந்து வீச்சாளர்களை பாராட்ட தான் வேண்டும். நாங்கள் நல்ல ஸ்கோர் எடுக்கவில்லை. 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். நியூசிலாந்து அணியினர் எங்களை விட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்’ என்றார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் சட்டர்த்வெய்ட் அளித்த பேட்டியில், ‘நாங்கள் இன்னும் எளிதாக வெற்றி பெற்று இருக்க வேண்டும். இருப்பினும் தொடரை வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டார்.


ஆசிரியரின் தேர்வுகள்...