2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி: இந்திய அணி அபார வெற்றி - குருணல் பாண்ட்யா, ரோகித் சர்மா அசத்தல்


2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி: இந்திய அணி அபார வெற்றி - குருணல் பாண்ட்யா, ரோகித் சர்மா அசத்தல்
x
தினத்தந்தி 8 Feb 2019 11:38 PM GMT (Updated: 8 Feb 2019 11:38 PM GMT)

ஆக்லாந்தில் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆக்லாந்து, 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி காலின் முன்ரோவும், விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டும் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முந்தைய ஆட்டத்தை போல் அவர்கள் அதிக நேரம் நிலைக்கவில்லை. 3-வது ஓவரில் புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் பவுண்டரி, சிக்சர் ஓடவிட்ட செய்பெர்ட் (12 ரன்) அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். புவனேஷ்வர்குமார் அதிகம் எழும்பாத அளவுக்கு ஷாட்பிட்ச்சாக வீசிய பந்து அவரது பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

அதைத் தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யா, நியூசிலாந்தின் ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். அவரது பந்து வீச்சில் காலின் முன்ரோ (12 ரன்), டேரில் மிட்செல் (1 ரன்), கேப்டன் வில்லியம்சன் (20 ரன், 17 பந்து, 3 பவுண்டரி) வீழ்ந்தனர். 8 ஓவர்களில் 51 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த நியூசிலாந்து அணியை காலின் டி கிரான்ட்ஹோமும், ராஸ் டெய்லரும் இணைந்து காப்பாற்றினர்.

குறிப்பாக அதிரடி காட்டிய கிரான்ட்ஹோம், இந்திய பவுலர்கள் சாஹல், குருணல் பாண்ட்யா ஆகியோரது ஓவர்களில் தலா 2 சிக்சர்களை விரட்டியடித்தார். இந்த மைதானத்தில் நேர்பகுதி எல்லைக்கோடு தூரம் குறைவு என்பதால் சர்வ சாதாரணமாக சிக்சர்கள் பறந்தன. ரன்ரேட்டும் 8 ரன்களை தாண்டியது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 180 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் இறுதிகட்டத்தில் இந்திய பவுலர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். கிரான்ட்ஹோம் 50 ரன்களிலும் (28 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்), ராஸ் டெய்லர் 42 ரன்னிலும் (36 பந்து, 3 பவுண்டரி) வெளியேறினர். அத்துடன் மேலும் சில விக்கெட்டுகளும் சரிந்தன.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 37 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 159 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் அபாரமாக ஆடி வலுவான தொடக்கத்தை உருவாக்கி தந்தனர். ரோகித் சர்மா, பிரமாதமான சிக்சர்களை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். 16-வது அரைசதத்தை எட்டிய ரோகித் சர்மா 50 ரன்களில் (29 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) இருந்த போது பந்தை தூக்கியடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் (9.2 ஓவர்) திரட்டினர்.

2-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பான்ட் இறங்கினார். மறுமுனையில் தவான் தனது பங்குக்கு 30 ரன் (31 பந்து, 2 பவுண்டரி) எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அவருக்கு பிறகு வந்த தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் பவுண்டரி, சிக்சர் அடித்த திருப்தியோடு (14 ரன்) நடையை கட்டினார்.

இதன் பின்னர் ரிஷாப் பான்டும், விக்கெட் கீப்பர் டோனியும் கைகோர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். ரிஷாப் பான்ட், பவுண்டரியுடன் இலக்கை எட்ட வைத்தார்.

இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷாப் பான்ட் 40 ரன்களுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), டோனி 20 ரன்களுடனும் (17 பந்து, ஒரு பவுண்டரி) களத்தில் இருந்தனர். 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்த்த குருணல் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மண்ணில் இந்தியா ருசித்த முதல் வெற்றி இது தான். இதற்கு முன்பு அங்கு 3 ஆட்டங்களில் தோல்வி கண்டிருந்தது.

முந்தைய தோல்விக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் நாளை நடக்கிறது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை

*இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் 31 வயதான ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் 39 ரன்கள் எடுத்த போது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனையாளர்களின் பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்தார். ரோகித் சர்மா இதுவரை 92 ஆட்டங்களில் விளையாடி 4 சதம், 16 அரைசதங்கள் உள்பட 2,288 ரன்கள் சேர்த்துள்ளார்.

* இந்த ஆட்டத்தில் விளாசிய 4 சிக்சரையும் சேர்த்து, ரோகித் சர்மாவின் ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக சிக்சர் நொறுக்கியவர்களில் ரோகித் சர்மா 2-வது இடம் வகிக்கிறார். முதலிடத்தை வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், நியூசிலாந்தின் கப்தில் (தலா 103 சிக்சர்) பகிர்ந்து கொண்டுள்ளனர்.

*20 ஓவர் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்தியா பெற்ற 12-வது வெற்றி (14 ஆட்டத்தில்) இதுவாகும். விராட் கோலியின் தலைமையிலும் 12 வெற்றிகள் தான் (20 ஆட்டம்) கிடைத்திருக்கிறது.


Next Story