‘இலங்கை அணியின் வீழ்ச்சி வேதனை அளிக்கிறது’ முன்னாள் வீரர் முரளிதரன் பேட்டி


‘இலங்கை அணியின் வீழ்ச்சி வேதனை அளிக்கிறது’ முன்னாள் வீரர் முரளிதரன் பேட்டி
x
தினத்தந்தி 9 Feb 2019 11:00 PM GMT (Updated: 9 Feb 2019 9:49 PM GMT)

‘இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி வேதனை அளிக்கிறது’ என்று சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரன் தெரிவித்தார்.

சென்னை,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் சென்னையில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

நான் ஓய்வு பெற்ற பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்பில் இல்லை. இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி எனக்கு வேதனை அளிக்கிறது. உலக கோப்பை போட்டியில் 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை கிரிக்கெட் அணி பெருமைக்குரிய கலாசாரத்தை கொண்டதாகும். தற்போதைய இலங்கை அணியின் செயல்பாடு கவலைக்குரிய அறிகுறியாகும்.

நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பணம் ஒரு இலக்காக இருந்ததில்லை. 1990-களில் கிரிக்கெட்டில் பணம் அதிகம் புழங்கவில்லை. விக்கெட்டை வீழ்த்துவதிலும், ரன் குவிப்பதிலும் தான் எங்கள் மோகம் இருந்தது. அந்த உத்வேகம் சற்று மாறி விட்டது. வீரர்கள் பணத்தை முக்கிய நோக்கமாக நினைத்தால் கிரிக்கெட் ஆட்டத்தின் தரம் வீழ்ந்து விடும். வீரர்கள் தங்களது ஆட்டம் குறித்து தான் சிந்திக்க வேண்டும். பணத்தை பற்றி அதிகம் சிந்திக்கக்கூடாது. நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் பணமும், அங்கீகாரமும் தானாகவே வரும்.

கடந்த 3 முதல் 4 வருடங்களாக இலங்கை அணி போதிய அளவு திறமையான வீரர்களை உருவாக்கவில்லை. திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அவர்களுக்கு களத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தெரிவதில்லை. பயிற்சியாளர்களால் கிரிக்கெட் வீரர்களை உருவாக்க முடியாது. பயிற்சியாளர்கள் ஆட்டத்தின் அடிப்படைகளை தான் சொல்லி கொடுக்க முடியும். தனிநபர்களின் திறமையும், ஆர்வமும் தான் வெற்றியாளர்களை உருவாக்கும். இலங்கை அணியின் முழுநேர ஆலோசகராக செயல்பட தற்போது எனக்கு நேரமில்லை. ஐ.பி.எல். போட்டியில் ஈடுபட்டு வருவதால் வேறு எந்த பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை.

20 ஆண்டுகளாக உயர்தர போட்டியில் விளையாடிய நான் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறேன். எனக்கு வேறு பணிகள் இருப்பதால் அணியினருடன் இணைந்து பணியாற்ற முடியாது. அதேநேரத்தில் இலங்கை அணியினருக்கு ஆலோசனை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.

மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் இந்திய வீரர்களான குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் உலக கோப்பை போட்டியில் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவார்கள் என்பது இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலையை பொறுத்தே அமையும். இங்கிலாந்து ஆடுகளங்கள் ஜூன், ஜூலை மாதங்களில் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். இவ்வாறு முரளிதரன் கூறினார்.

Next Story