கிரிக்கெட்

தொடரை வெல்லப்போவது யார்? கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை + "||" + In the last 20 over cricket match India and New Zealand Today is a test

தொடரை வெல்லப்போவது யார்? கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

தொடரை வெல்லப்போவது யார்? கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது.
ஹாமில்டன்,

இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எழுச்சி பெற்றது. இதனால் இந்த 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.


இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கடந்த பத்து 20 ஓவர் போட்டித் தொடர்களை இழக்காத இந்திய அணி அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் ஆவலில் உள்ளது. 2-வது ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல தொடக்கம் (79 ரன்) அமைத்து தந்ததும், பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், கலீல் அகமது ஆகியோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசியதும் வெற்றியை எளிதாக்கியது. அதே போன்று இன்றைய ஆட்டத்திலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால், தொடரை வசப்படுத்த முடியும். இந்திய அணியில் அனேகமாக தினேஷ் கார்த்திக் வெளியே உட்கார வைக்கப்பட்டு, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெறுவார் என்று தெரிகிறது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் 2 சிக்சர் எடுத்தால், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது அவர் 102 சிக்சர் அடித்துள்ளார்.

இந்திய அணி ஹாமில்டனில் 4-வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கி ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 92 ரன்னில் சுருண்டதை யாரும் மறந்து விட முடியாது. அதே மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடப்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சிலும் நல்ல நிலையிலேயே உள்ளது. ஆனால் ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதில் சீரான போக்கு இல்லை. அது தான் அவர்களின் பலவீனமும் கூட. ஏற்கனவே ஒரு நாள் தொடரை பறிகொடுத்து விட்ட நிலையில், 20 ஓவர் தொடரை வென்று அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் அந்த அணி வீரர்கள் இருப்பதால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

ஹாமில்டனில் இதுவரை எட்டு 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் நியூசிலாந்து அணி 6-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். இந்திய அணி இங்கு 20 ஓவர் போட்டியில் ஆட இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இரண்டாவது 20 ஓவர் போட்டி நடந்த ஆக்லாந்து ஸ்டேடியத்தை விட இது சற்று பெரியது. ஆனாலும் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், வேகமான அவுட் பீல்டு ஆகியவற்றை பார்க்கும் போது இங்கு ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, சோதி, பிளைர் டிக்னெர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 மற்றும் டி.டி. ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

முன்னதாக இதே மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் சந்திக்கின்றன.

முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்குகிறது.