கடைசி போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றி


கடைசி போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றி
x
தினத்தந்தி 10 Feb 2019 11:09 PM GMT (Updated: 10 Feb 2019 11:09 PM GMT)

கடைசி போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றிபெற்றது.

ஹாமில்டன், 

இந்தியா - நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில், முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சோபி டேவின் 72 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 86 ரன்கள் (62 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசிய போதிலும், மற்றவர்களின் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் காஸ்பெரேக் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரில் மிதாலி-தீப்தி ஷர்மா கூட்டணியால் 2 பவுண்டரி உள்பட 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி கண்டது. இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. மிதாலி ராஜ் 24 ரன்களுடனும் (20 பந்து, 3 பவுண்டரி), தீப்தி ஷர்மா 21 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அரைசதத்துடன் 2 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீராங்கனை சோபி டேவின் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது.

தோல்விக்கு பிறகு இந்திய வீராங்கனை மந்தனா கூறுகையில், ‘எங்களது வீராங்கனைகள் நன்றாக போராடியதாகவே நினைக்கிறேன். இந்த தொடரை திரும்பி பார்த்தால் 70, 80 சதவீதம் வெற்றி வாய்ப்பில் இருந்தே தோற்று இருக்கிறோம். பேட்டிங்கில் இந்த குறைபாட்டை நாங்கள் வெகு சீக்கிரமாக சரி செய்ய வேண்டும். யாராவது ஒரு வீராங்கனை 20 ஓவர் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டியது அவசியமாகும். இன்றைய ஆட்டத்தை நான் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்று விரும்பினேன். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை’ என்றார்.

Next Story