உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வில் ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், ரஹானே கருத்தில் கொள்ளப்படுவார்கள் தேர்வு குழு தலைவர் பேட்டி


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வில் ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், ரஹானே கருத்தில் கொள்ளப்படுவார்கள் தேர்வு குழு தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 11 Feb 2019 11:45 PM GMT (Updated: 11 Feb 2019 11:05 PM GMT)

‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வில் ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், ரஹானே பெயர் கருத்தில் கொள்ளப்படும்’ என்று இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் தங்கள் வீரர்களின் இறுதி பெயர் பட்டியலை ஏப்ரல் மாதத்துக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வீரர்கள் ஏறக்குறையை உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரே ஒரு இடத்துக்கான வீரர் மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சில வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் எஞ்சிய ஒரு வீரருக்கான இடத்தை கடைசி நேரத்தில் முடிவு செய்யலாம் என்று நினைக்கிறோம். அந்த ஒரு இடத்துக்கான போட்டியில் ரிஷாப் பான்ட், விஜய் சங்கர் (தமிழ்நாடு), ரஹானே ஆகியோரின் பெயர்கள் கருத்தில் கொள்ளப்படும்.

ரிஷாப் பான்ட் கடந்த ஒரு வருடத்தில் வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளார். அவருக்கு இன்னும் சற்று அனுபவம் தேவையாகும். அதனால் தான் அவருக்கு இந்திய ‘ஏ’ அணியில் அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. இதேபோல் விஜய் சங்கரும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ரஹானே முதல் தர போட்டிகளில் நல்ல ரன் சேர்த்து வருகிறார். இந்த 3 பேரும் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெறுவதற்கான ரேசில் உள்ளனர். வரும் போட்டிகளில் அவர்கள் செயல்படும் விதத்தை கணக்கில் கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனி மிகவும் முக்கியமான வீரர். விக்கெட் கீப்பிங், பேட்டிங் ஆகிய இரண்டிலும் அணிக்கு பங்கு அளிக்கக்கூடியவர். இளம் வீரர்களுக்கு மட்டுமின்றி கேப்டன் விராட்கோலிக்கும் களத்தில் சமயத்துக்கு தகுந்தபடி நல்ல ஆலோசனை அளிக்கக்கூடியவர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் அவர் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகும். அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் சில சமயங்களில் விமர்சனம் எழும்புகிறது. மற்றபடி அவரது பார்ம் குறித்து எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரிடம் இருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்பது அவருக்கு தெரியும்.

இங்கிலாந்து ஆடுகளங்கள் கடினமாகவும், பவுன்சாகவும் இருக்கும். உலக கோப்பை போட்டிக்கான ஆடுகளங்களும் அப்படி தான் இருக்கும் என்று கருதுகிறோம். இதனால் விரலை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசுபவர்களை விட மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் வீரர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்.

இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். இதனால் அணி தேர்வு என்பது எளிதான காரியம் இல்லை. இதற்கு முன்பு இந்திய அணி உலக கோப்பையை வென்றபோதெல்லாம் அணியில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் சம விகிதாச்சாரத்தில் இடம் பிடித்துள்ளனர். அதனை கருத்தில் கொண்டு இந்திய அணி இறுதி செய்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story