கிரிக்கெட்

அணியில் தேர்வு செய்யாததால் டெல்லி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்: கவுதம் கம்பீர் கொந்தளிப்பு + "||" + Gautam Gambhir's Angry Post After Player Attacks Ex-Cricketer Amit Bhandari In Delhi

அணியில் தேர்வு செய்யாததால் டெல்லி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்: கவுதம் கம்பீர் கொந்தளிப்பு

அணியில் தேர்வு செய்யாததால் டெல்லி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்: கவுதம் கம்பீர் கொந்தளிப்பு
அணியில் தேர்வு செய்யாததால் டெல்லி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கவுதம் கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

டெல்லி கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருப்பவர் அமித் பண்டாரி. இவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர். சையத் முஸ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்காக 23 வயதுக்குட்பட்ட டெல்லி அணி வீரர்கள் தேர்வுக்கு 33 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி வளாகத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. அதை அமித் பண்டாரி மற்றும் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மைதானத்துக்குள் அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட கும்பல் புகுந்து, அமித் பண்டாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. பின் அவரை ஹாக்கி ஸ்டிக், இரும்பு கம்பி, கிரிக்கெட் மட்டை ஆகியவற்றால் சரமாரியாகத் தாக்கியது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை தடுத்தனர். ஆனால், அந்த கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு தாக்குதலை தொடர்ந்தது.

இதில் நிலைதடுமாறிய பண்டாரி சரிந்து விழுந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடியது. பலத்த காயம் அடைந்த பண்டாரியை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் நான்கு தையல் போடப்பட்டது. அவர் குணமாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். 23 வயதுக்கு உட்பட்ட அணி தேர்வில், அனுஜ் தேடா என்பவர் தேர்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாக ஆத்திரத்தில், அவர் ஏற்பாட்டில் அந்த கும்பல் இந்த தாக்குதலை நடத்தியிருப்பது தெரிய வந்தது.

கம்பீர் கண்டனம்

இந்த நிலையில், மேற்கூறிய தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தனது டுவிட்டரில் கம்பீர் கூறியிருப்பதாவது:- ” தலைநகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை. இந்த விவகாரம் மறைக்கப்பட்டுவிடக் கூடாது. இதை நான் தனிப்பட்ட முறையில் உறுதி செய்வேன். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஆயுள் தடையை உடனடியாக விதிக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.