இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 485 ரன்கள் இலக்கு


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 485 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 12 Feb 2019 10:30 PM GMT (Updated: 12 Feb 2019 8:38 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 485 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

செயின்ட் லூசியா, 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 485 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

485 ரன்கள் இலக்கு

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 277 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 154 ரன்களும் எடுத்தன. 123 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3–வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்திருந்தது. தனது 16–வது சதத்தை பூர்த்தி செய்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 111 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஜோ ரூட் 122 ரன்களில் (225 பந்து, 10 பவுண்டரி) கேட்ச் ஆனார். அத்துடன் இங்கிலாந்து அணி தனது இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பென் ஸ்டோக்ஸ் 48 ரன்களுடன் களத்தில் இருந்தார். முன்னதாக ஜோ டென்லி (69 ரன்), ஜோஸ் பட்லர் (56 ரன்) அரைசதம் அடித்தனர்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 485 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி உணவு இடைவேளையின் போது 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 35 ரன்களுடன் ஊசலாடிக் கொண்டிருந்தது.

களத்தில் சர்ச்சை

இதற்கிடையே 3–வது நாள் ஆட்டத்தின் போது ஜோ ரூட்டுக்கும், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ‌ஷனோன் கேப்ரியலுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. ‘அவமதிக்கும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தாதே. ஓரின சேர்க்கையாளராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லையே’ என்று ஜோ ரூட் சொல்வது ஸ்டம்ப் மீதுள்ள மைக்கில் பதிவாகியுள்ளது. ஆனால் கேப்ரியல், ஜோ ரூட்டை நோக்கி என்ன சொன்னார் என்பது தெரியவில்லை.

இந்த சர்ச்சை குறித்து அலட்டிக்கொள்ளாத ஜோ ரூட் பின்னர் அளித்த பேட்டியில் ‘சில நேரங்களில் உணர்ச்சி வேகத்தில் சில வீரர்கள் வார்த்தைகளை கொட்டி விட்டு பிறகு வருத்தப்படுவார்கள். களத்தில் நடப்பதை அங்கேயே விட்டு விட வேண்டும். பெரிது படுத்தக்கூடாது’ என்றார்.


Next Story