இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 235 ரன்னில் ஆல்–அவுட்


இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 235 ரன்னில் ஆல்–அவுட்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 9:15 PM GMT)

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல்–அவுட் ஆனது.

டர்பன், 

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல்–அவுட் ஆனது.

டெஸ்ட் கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. இலங்கை அணியில் பேட்ஸ்மேன் ஒஷாடா பெர்னாண்டோ, சுழற்பந்து வீச்சாளர் லசித் அம்புல்டெனியா அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டனர். இதில் ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் கருணாரத்னே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். எதிர்பார்த்ததை போல் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது.

இதனால் தடுமாற்றத்துடன் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் டீன் எல்கர் ரன் ஏதுமின்றியும், அம்லா 3 ரன்னிலும், மார்க்ராம் 11 ரன்னிலும் வெளியேறினர்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஓரளவு நிலைத்து நின்று ஆடினாலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. பவுமா 47 ரன்னிலும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 35 ரன்னிலும் வீழ்ந்தனர்.

தென்ஆப்பிரிக்கா 235 ரன்

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஒரு பக்கம் போராட மறுமுனையில் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க உதவிய குயின்டான் டி காக் கடைசி விக்கெட்டாக 80 ரன்களில் (94 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 59.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும், கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கருணாரத்னே 28 ரன்களுடனும், ஒஷாடே பெர்னாண்டோ 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2–வது நாள் ஆட்டம் நடைபெறும்.

15 வினாடி குழப்பம்

இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்க வீரர் அம்லாவுக்கு, விஷ்வா பெர்னாண்டோவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. கேட்டு இலங்கை வீரர்கள் முறையிட்டனர். ஆனால் நடுவர் அலிம் தர் விரலை உயர்த்த மறுத்தார். இதையடுத்து சிறிது நேர யோசனைக்கு பிறகு இலங்கை கேப்டன் கருணாரத்னே டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தார். ஆனால் தாமதமாகி விட்டாக கூறி டி.ஆர்.எஸ். வாய்ப்பை அனுமதிக்க முடியாது என்று நடுவர் கூறி விட்டார். 15 வினாடிக்குள் டி.ஆர்.எஸ்.–க்கு ‘சிக்னல்’ காட்ட வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் அந்த நேரம் கடந்து விட்டதாக நடுவர் கூறினாலும், 13 வினாடிகளே அப்போது ஆகியிருந்ததாக வர்ணனையாளர்கள் கூறினர். இலங்கை கேப்டன் கருணாரத்னே, டி.ஆர்.எஸ். வாய்ப்பை துரிதமாக கேட்டு இருந்தால் அம்லாவுக்கு அவுட் வழங்கப்பட்டு இருக்கும். ஆனாலும் அம்லா அதிக நேரம் நிற்கவில்லை. ஸ்லிப்பில் கேட்ச் ஆகி 3 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.


Next Story