இரானி கோப்பை கிரிக்கெட்: விதர்பா அணி 425 ரன்கள் குவிப்பு கார்னிவர் சதம் அடித்தார்


இரானி கோப்பை கிரிக்கெட்: விதர்பா அணி 425 ரன்கள் குவிப்பு கார்னிவர் சதம் அடித்தார்
x
தினத்தந்தி 14 Feb 2019 10:30 PM GMT (Updated: 14 Feb 2019 7:30 PM GMT)

நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா, ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.

நாக்பூர், 

நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா, ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி 2–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் அக்‌ஷய் வாட்கர் 50 ரன்களுடனும், அக்‌ஷய் கார்னிவர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3–வது நாளான நேற்று விதர்பா அணியின் கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். அக்‌ஷய் வாட்கர் 73 ரன்னில் போல்டு ஆனார். இதன் பின்னர் பின்வரிசை வீரர்களின் துணையுடன் கார்னிவர் அதிரடி காட்டியதுடன் தங்கள் அணி முன்னிலை பெறவும் வித்திட்டார். தனது முதலாவது முதல்தர போட்டி சதத்தை விளாசிய கார்னிவர் 102 ரன்களில் (133 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அக்‌ஷய் வஹாரே 20 ரன்களும், குர்பானி 28 ரன்களும் எடுத்தனர். முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 142.1 ஓவர்களில் 425 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி அன்மோல்பிரீத் சிங் (6 ரன்), மயங்க் அகர்வால் (27 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது. ஹனுமா விஹாரி 40 ரன்களுடனும், கேப்டன் ரஹானே 25 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 4–வது நாள் ஆட்டம் நடைபெறும்.


Next Story