இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா 374 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ விஹாரி மீண்டும் சதம் அடித்து சாதனை


இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா 374 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ விஹாரி மீண்டும் சதம் அடித்து சாதனை
x
தினத்தந்தி 15 Feb 2019 10:15 PM GMT (Updated: 15 Feb 2019 8:59 PM GMT)

நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா– ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.

நாக்பூர், 

நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா– ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்களும், விதர்பா 425 ரன்களும் எடுத்தன. 95 பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 3–வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரி 40 ரன்களுடனும், கேப்டன் ரஹானே 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஹனுமா விஹாரி சதம் அடித்தார். ஏற்கனவே முதல் இன்னிங்சில் 114 ரன்கள் எடுத்திருந்த ஹனுமா விஹாரி, இரானி கோப்பை வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய 2–வது வீரர் (முதலில் இச்சாதனையை செய்தவர் ஷிகர் தவான்) என்ற பெருமையை பெற்றார். மறுமுனையில் சதத்தை தவற விட்ட கேப்டன் ரஹானே 87 ரன்களில் கேட்ச் ஆனார். ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 2–வது இன்னிங்சில் 107 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 374 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஹனுமா விஹாரி 180 ரன்களுடனும் (300 பந்து, 19 பவுண்டரி, 4 சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 61 ரன்களுடனும் (52 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

இதன் மூலம் விதர்பா அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்களில் கேப்டன் பைஸ் பாசலின் (0) விக்கெட்டை இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. கைவசம் 9 விக்கெட் வைத்துள்ள விதர்பா அணியின் வெற்றிக்கு இன்னும் 240 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு இரு அணிக்கும் சரிசமமாக காணப்படுகிறது.


Next Story