வங்காளதேசத்துக்கு எதிரான 2–வது ஆட்டத்திலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி கப்தில் சதம் விளாசினார்


வங்காளதேசத்துக்கு எதிரான 2–வது ஆட்டத்திலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி கப்தில் சதம் விளாசினார்
x
தினத்தந்தி 16 Feb 2019 9:30 PM GMT (Updated: 16 Feb 2019 8:53 PM GMT)

நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது.

கிறைஸ்ட்சர்ச், 

நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இதில் மேகமூட்டமான சீதோஷ்ண நிலைக்கு மத்தியில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 49.4 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக முகமது மிதுன் 57 ரன்களும், சபிர் ரகுமான் 43 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் லோக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளும், டாட் ஆஸ்ட்லே, ஜேம்ஸ் நீ‌ஷம் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 36.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் சதம் நொறுக்கிய தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 118 ரன்கள் (88 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். இது அவரது 16–வது சதமாகும். கேப்டன் கேன் வில்லியம்சன் அரைசதம் (65 ரன்) அடித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் தனதாக்கியது. முதலாவது ஆட்டத்திலும் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 20–ந்தேதி டுனெடினில் நடக்கிறது.


Next Story