உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது மும்பை கிளப் வலியுறுத்தல்


உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது மும்பை கிளப் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:00 PM GMT (Updated: 17 Feb 2019 8:42 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.

மும்பை, 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.

இம்ரான்கான் புகைப்படம் அகற்றம்

காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில், பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தாக்குதலை தொடுத்தது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு என்பதால் அந்த நாட்டுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா விளையாடக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒரு அங்கமான கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவின் (சி.சி.ஐ) தலைமை அலுவலகம் மும்பை பிராபோர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ளது. இந்த கிளப் சார்பில், பாகிஸ்தான் கி£க்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான்கானை கவுரவிக்கும் வகையில் அவரது புகைப்படம் இங்குள்ள உணவக அறையில் வைக்கப்பட்டு இருந்தது. இதே போல் சக வீரர்களுடன் இம்ரான்கான் இருக்கும் குரூப் போட்டோ ஒன்றும் சுவற்றில் தொங்கவிடப்பட்டு இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிளப் நிர்வாகிகளின் முடிவின்படி இவ்விரு புகைப்படங்களும் இப்போது அகற்றப்பட்டுள்ளது.

உலக கோப்பையில் விளையாடக்கூடாது

அந்த கிளப்பின் செயலாளர் சுரேஷ் பாப்னா கூறுகையில், ‘பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சி.சி.ஐ. ஒரு விளையாட்டு அமைப்பு தான். ஆனால் விளையாட்டை விட தேசத்தின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது.

இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தான் பதில் சொல்ல வேண்டும். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை என்று அவர் நம்பினால், அது பற்றி அவர் வெளிப்படையாக பேச வேண்டும். உண்மை நிலவரத்தை வெளி உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்படி அவர் பகிரங்கமாக சொல்லாவிட்டால், இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உண்டு என்றே அர்த்தம்’ என்றார்.

ஒளிபரப்பு நிறுத்தம்

இதற்கிடையே துபாயில் நடந்து வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் போட்டி, இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படுவது நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை பெற்றுள்ள டிஸ்போர்ட் நிறுவனம், இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் தனது ஒளிபரப்பை இந்தியாவில் துண்டித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் இந்த போட்டியில் இந்தியா தவிர மற்ற நாட்டு வீரர்கள் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.5 கோடி வழங்க கோரிக்கை

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனில் கண்ணா (பொறுப்பு), அதன் நிர்வாக கமிட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘காஷ்மீர் தாக்குதலில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் குறைந்தது ரூ.5 கோடியை சம்பந்தப்பட்ட அரசாங்க முகமை மூலம் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள், மாநில கிரிக்கெட் சங்கங்களும் தங்களது பங்களிப்பை அளிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விசாகப்பட்டினத்தில் வருகிற 24–ந்தேதி நடக்கும் இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டிக்கு முன்பாகவும், அடுத்த மாதம் 23–ந்தேதி நடக்கும் ஐ.பி.எல். தொடக்க விழாவிற்கு முன்பாகவும் இரண்டு நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story