கிரிக்கெட்

பிக்பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி ‘சாம்பியன்’ + "||" + Bikash Cricketer: Melbourne Renegades team 'champion'

பிக்பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி ‘சாம்பியன்’

பிக்பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி ‘சாம்பியன்’
பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

மெல்போர்ன், 

பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

பிக்பாஷ் கிரிக்கெட்

8–வது பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்சும், கிளைன் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது.

40 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் முதலில் பேட் செய்த மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது. ஆடுகளத்தன்மை மெதுவாக (ஸ்லோ) இருந்ததால் பேட்ஸ்மேன்களால் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியவில்லை. அதிகபட்சமாக டாம் ஹூபர் 43 ரன்களும், டேனியல் கிறிஸ்டியன் 38 ரன்களும் எடுத்தனர். முன்னதாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் (13 ரன்) துரதிர்ஷ்டவசமாக ரன்–அவுட் ஆனார். அதாவது பேட்ஸ்மேன் நேராக அடித்த பந்தை பவுலர் காலால் தட்டிவிட அது எதிர்முனை ஸ்டம்பை தாக்கியது. அப்போது கிரீசை விட்டு ஆரோன் பிஞ்ச் வெளியே நின்றதால் ரன்–அவுட் ஆக நேரிட்டது. இதனால் அதிருப்தியுடன் வெளியேறிய அவர் பெவிலியனில் இருந்த ஒரு பிளாஸ்டிக் சேரை பேட்டால் அடித்து உடைத்து தனது ஆத்திரத்தை தணித்துக் கொண்டார்.

ரெனகேட்ஸ் சாம்பியன்

அடுத்து களம் புகுந்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டங்கும், மார்கஸ் ஸ்டோனிசும் அருமையான தொடக்கத்தை அமைத்து தந்தனர். ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் (12.5 ஓவர்) எடுத்திருந்த போது, அந்த அணி சுலபமாக வெற்றி பெற்று விடும் என்றே தோன்றியது. ஆனால் தொடக்க கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. ஸ்டோனிஸ் 39 ரன்களிலும், பென் டங் 57 ரன்களிலும், கேமரூன் பாய்சின் சுழற்பந்து வீச்சில் வீழ்ந்தனர். அதன் பிறகு அந்த அணியின் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக சரிந்தன. ஹேன்ட்ஸ்கோம்ப் (0), கேப்டன் மேக்ஸ்வெல் (1 ரன்), வெய்ன் பிராவோ (3 ரன்) ஆகியோரும் இதில் அடங்குவர். வெறும் 19 ரன் இடைவெளியில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து நிலைகுலைந்ததால், ஆட்டம் ரெனகேட்ஸ் அணியின் பக்கம் திரும்பியது.

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 132 ரன்களே எடுத்தது. இதனால் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, முதல்முறையாக இந்த கோப்பையை உச்சிமுகர்ந்தது. ஆல்–ரவுண்டராக ஜொலித்த டேனியல் கிறிஸ்டியன் (38 ரன் மற்றும் 2 விக்கெட்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அடுத்து இந்தியாவில்...

பிக்பாஷ் போட்டி நிறைவடைந்த நிலையில், சர்வதேச 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினர் இந்தியாவுக்கு புறப்படுகிறார்கள். இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 24–ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.