டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் ரபடாவுக்கு சறுக்கல் கம்மின்ஸ் முதலிடம் பிடித்தார்


டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் ரபடாவுக்கு சறுக்கல் கம்மின்ஸ் முதலிடம் பிடித்தார்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:00 PM GMT (Updated: 17 Feb 2019 8:50 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் (897 புள்ளி) 2–வது இடத்திலும், இந்தியாவின் புஜாரா (881 புள்ளி) 3–வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (857 புள்ளி) 4–வது இடத்திலும் மாற்றம் இன்றி தொடருகிறார்கள். டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 153 ரன்கள் குவித்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தங்கள் அணிக்கு வியப்புக்குரிய வெற்றியைத் தேடித்தந்த இலங்கை வீரர் குசல் பெரேரா 58 இடங்கள் உயர்ந்து 40–வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். இதே டெஸ்டில் 35, 90 ரன்கள் வீதம் எடுத்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 7 இடங்கள் முன்னேறி முதல்முறையாக டாப்–10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் இலங்கை பொறுப்பு கேப்டன் கருணாரத்னேவுடன் 10–வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா முதலிடத்தை பறிகொடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அவர் சோபிக்காததால் 849 புள்ளிகளுடன் 3–வது இடத்துக்கு சரிந்துள்ளார். இதனால் 2–வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (878 புள்ளி) முதலிட அரியணையில் ஏறியுள்ளார். 2006–ம் ஆண்டு மெக்ராத்துக்கு பிறகு ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்த ஆஸ்திரேலிய பவுலர் இவர் தான். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (862 புள்ளி) 2–வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் (821 புள்ளி) 4–வது இடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (794 புள்ளி) 5–வது இடத்திலும் உள்ளனர்.


Next Story