கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது + "||" + IPL Cricket: Chennai-Bangalore teams clash in the opening match - March 23 in Chennai

ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது

ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் அடுத்த மாதம் 23-ந்தேதி சென்னையில் மோதுகின்றன.
மும்பை,

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 23-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்பதால் போட்டி அட்டவணை வெளியிடப்படாமல் இருந்தது.


இந்த நிலையில் முதல் 17 லீக் ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணையை ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று வெளியிட்டது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.எம். சிதம்பரம் ஸ்டேடியத்தில் மார்ச் 23-ந் தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

முதல் 2 வார காலத்துக்கான இந்த போட்டி அட்டவணையில் 6 அணிகள் 4 ஆட்டங்களில் விளையாடுகிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மட்டும் 5 ஆட்டத்தில் விளையாடுகின்றன. எல்லா அணிகளும் உள்ளூரில் 2 ஆட்டங்களில் ஆடுகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மட்டும் உள்ளூரில் 3 ஆட்டத்தில் விளையாடுகிறது. வழக்கமாக ஒரு நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற்றால் முதல் ஆட்டம் மாலை 4 மணிக்கும், 2-வது ஆட்டம் இரவு 8 மணிக்கும் தொடங்கி நடைபெறும். ஆனால் போட்டி நடைபெறும் நேரம் குறித்து எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தேவை ஏற்பட்டால் அதற்கு தகுந்தபடி போட்டி அட்டவணையில் ஒரு சில மாற்றம் செய்யப்படும் என்றும், எஞ்சிய ஆட்டங்களுக்கான அட்டவணையை இறுதி செய்வதில் போலீஸ் மற்றும் மத்திய, மாநில அரசு துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் ஐ.பி.எல். இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.