கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க மண்ணில் வரலாறு படைக்குமா இலங்கை அணி? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + Is Sri Lanka a team of history on South African soil? The 2nd Test starts today

தென்ஆப்பிரிக்க மண்ணில் வரலாறு படைக்குமா இலங்கை அணி? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

தென்ஆப்பிரிக்க மண்ணில் வரலாறு படைக்குமா இலங்கை அணி? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக தொடரை வென்று வரலாறு படைக்கும் முனைப்புடன் இலங்கை அணி 2-வது டெஸ்டில் இன்று களம் இறங்குகிறது.
போர்ட்எலிசபெத்,

திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.


முதலாவது டெஸ்டில் இலங்கை அணியின் எழுச்சி அனைவரையும் வியக்க வைத்தது. 304 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 226 ரன்களில் 9-வது விக்கெட்டை இழந்த போது தோல்வி உறுதி என்றே நினைத்தனர். ஆனால் குசல் பெரேரா (153 ரன்) தனி வீரராக நிலைத்து நின்று போராடி தங்கள் அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தேடித்தந்தார். இதனால் இலங்கை வீரர்களின் நம்பிக்கை அதிகமாகியுள்ளது. டர்பன் டெஸ்டில் இலங்கை புதுமுக சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்டெனியா 5 விக்கெட்டுகள் அள்ளியது முக்கிய அம்சமாகும்.

தென்ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. புதிய சகாப்தம் படைக்க இலங்கை அணிக்கு தற்போது அருமையான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்த டெஸ்டில் அந்த அணி குறைந்தது டிரா செய்தாலே தொடரை சொந்தமாக்கி விடலாம்.

அதே சமயம் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. உள்ளூரில் கடந்த 3 ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. அந்த பெருமையை காப்பாற்றும் வகையில் தென்ஆப்பிரிக்க அணியினர் வரிந்து கட்டுவார்கள் என்று நம்பலாம். தசைப்பிடிப்பால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர் இந்த டெஸ்டில் ஆடமாட்டார் என்று பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் வியான் முல்டர் அறிமுக வீரராக இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கு தென்ஆப்பிரிக்க அணி இதுவரை 29 டெஸ்டுகளில் விளையாடி அதில் 13-ல் வெற்றியும், 11-ல் தோல்வியும் கண்டுள்ளது. 5 டெஸ்ட் டிராவில் முடிந்தது. இலங்கை அணி இங்கு 2016-ம் ஆண்டு ஆடிய ஒரே ஒரு டெஸ்டில் 206 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...