கெயில் சதம் வீண்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து


கெயில் சதம் வீண்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து
x
தினத்தந்தி 21 Feb 2019 8:21 AM GMT (Updated: 21 Feb 2019 8:21 AM GMT)

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசி கிறிஸ் கெய்ல் உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த  வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் சிக்சர் மழை பொழிந்தார்.

தொடக்கத்தில் நிதானமாக ஆடிய அவர் போக போக உள்ளூர் ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார். ஒரு சிக்சர் 121 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. மற்றொரு முறை பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது. 35 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 3 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது 39 வயதான கிறிஸ் கெய்ல் 100 ரன்களுடன்  (100 பந்து, 3 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தார். இது அவருக்கு 24-வது சதமாகும். மேலும் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (20 ஓவர், ஒரு நாள் மற்றும் டெஸ்ட்) அதிக சிக்சர் விளாசியவர் என்ற சாதனையையும் கெய்ல் படைத்தார்.

முதல் சிக்சர் அடித்த போது, இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானின் அப்ரிடியை (476 சிக்சர்) அவர் முந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 23 சிக்சர்கள் அடித்தது. இது புதிய சாதனையாகும். ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச சிக்சர் ஆகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்து 22 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் புதிய சாதனை நிகழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல் 12 சிக்சர்களும், பிராவோ 4 சிக்சர்களும், ஆஸ்தரே நர்ஸ் 3 சிக்சர்களும், கேப்பெல், ஹோப், ஹெட்மயர், தேவேந்திர பிஷூ தலா ஒரு சிக்சரும் அடித்தனர்.

போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி   50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. 361 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 8 பந்துகள் மீதமிருக்கையில், 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

கரிபியன் மண்ணில், பிரிட்ஜ் டவுனில் மிகப்பெரிய ஸ்கோரான  360 ரன்களை சேஸ் செய்தது இதுதான் முதல்முறையாகும்.  இங்கிலாந்துக்கும் இதுதான் முதல்முறை. அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய 3-வது சேஸிங் இதுவாகும்.

Next Story