உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெளியேற்ற வேண்டும் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் சொல்கிறார்


உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெளியேற்ற வேண்டும்  முன்னாள் கேப்டன் கவாஸ்கர் சொல்கிறார்
x
தினத்தந்தி 21 Feb 2019 11:45 PM GMT (Updated: 21 Feb 2019 9:12 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதை விட அவர்களை களத்தில் வீழ்த்தி வெளியேற்ற வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சையும் கொதிக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுத திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு புறம் உலக கோப்பை தொடரில் ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆடக்கூடாது என்று முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தால் யாருக்கு வெற்றி கிடைக்கும்? நான் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி குறித்து கூட பேசவில்லை. லீக்கில் அவ்வாறு நடந்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அந்த அணி 2 புள்ளியை எளிதில் பெறும்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நாம் இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது கிடையாது. ஒவ்வொரு முறையும் நாம் அவர்களை வீழ்த்தி (6 முறை) இருக்கிறோம். 2 புள்ளியை வழங்கி, அவர்களது கையை ஓங்க விடக்கூடாது. களம் இறங்கி பாகிஸ்தானை சாய்த்து, அரைஇறுதிக்கு அந்த அணி முன்னேறக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்.

அதே சமயம் இந்த முறை நாம் பாகிஸ்தானுடன் விளையாடுவோமோ என்ற கேள்விக்கு நான் நாட்டின் பக்கமே இருக்க விரும்புகிறேன். தேசத்தின் நலனே முதலில் முக்கியம். இந்திய அரசாங்கம் எந்த முடிவு எடுத்தாலும் அதை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்வேன். பாகிஸ்தானுடன் நாம் விளையாடக்கூடாது என்று நாடு விரும்பினால், அந்த முடிவுக்கு ஆதரவாக நிற்பேன்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2007-ம் ஆண்டுக்கு பிறகு முழுமையான நேரடி தொடரில் நாம் விளையாடவில்லை. நேரடி தொடரில் ஆடாமல் தவிர்க்கும் போது, பாகிஸ்தானுக்கு நிறைய பாதிப்பு (கோடிக்கணக்கில் நஷ்டம்) ஏற்படுகிறது. ஆனால் உலக கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் அவர்களுடன் மோதுவதை புறக்கணித்தால், இழப்பு இந்தியாவுக்கு தான். இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அனைவரின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடாமல் இரண்டு புள்ளியை இழந்தாலும் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய அளவுக்கு நமது அணி வலிமையாக இருப்பதை அறிவேன். ஆனால் இந்த போட்டியில் அவர்களை தோற்கடித்து அடுத்த சுற்றை எட்டாமல் இருக்க நாம் ஏன் முட்டுக்கட்டை போடக்கூடாது?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் முறையிடலாம். ஆனால் அது போன்று நடக்காது. ஏனெனில் ஐ.சி.சி.யின் மற்ற நாட்டு உறுப்பினர்களும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற நாடுகள் இந்தியாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வாய்ப்பில்லை.

துபாயில் வருகிற 27-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை நடக்கும் ஐ.சி.சி. கூட்டத்தின் போதும் இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. மற்ற நாடுகள் இது இரு நாட்டு உள்விவகாரம், தயவு செய்து எங்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.

பாகிஸ்தான் பிரதமராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் எனது நண்பர் ஆவார். பதவி ஏற்கும் போது, ‘இது புதிய பாகிஸ்தானாக இருக்கப்போகிறது என்று நீங்கள் (இம்ரான் கான்) சொன்னீர்கள். நட்புறவுக்கு இந்தியா முதல் அடி எடுத்து வைத்தால் நாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்போம் என்றும் சொன்னீர்கள். அரசியல்வாதியாக அல்லாமல் உங்களை ஒரு சராசரி விளையாட்டு வீரராக நான் கேட்க விரும்புவது, முதலில் நீங்கள் ஆக்கப்பூர்வமான முதல் அடியை எடுத்து வையுங்கள் என்பது தான். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். இந்தியாவில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் உங்கள் நாட்டவரை இந்தியாவிடம் ஒப்படையுங்கள். இல்லாவிட்டால் ஐ.நா.விடம் ஒப்படையுங்கள். நீங்கள் இந்த இரண்டு அடியை எடுத்து வையுங்கள். அதன் பிறகு இந்தியாவிடம் இருந்து பல நட்புறவான நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கலாம்.

ஒரு கிரிக்கெட் வீரராக இம்ரான் கான், இந்தியாவில் நிறைய நேரம் செலவிட்டு இருக்கிறார். மற்ற பாகிஸ்தானியரை விட இந்திய மக்கள் பற்றி அவருக்கு அதிகமாக தெரியும். எனவே இந்த அடியை எடுத்து வைப்பதில் தகுதியானவர் இம்ரான் கான் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

Next Story