கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் ஆஸ்திரேலியா வெற்றி + "||" + The first T20 against India: Australia won the last ball

இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் ஆஸ்திரேலியா வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் 127 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் எட்டி திரில் வெற்றியை பெற்றது.
விசாகப்பட்டினம்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடந்தது. இந்திய அணியில் லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால், ஷிகர் தவான் வெளியே உட்கார வைக்கப்பட்டார். சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே அறிமுக வீரராக இடம் பிடித்தார்.


ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, காஷ்மீரில் உள்ள புலவாமாவில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மறைவுக்கு இரண்டு அணி வீரர்களும் வரிசையில் நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டையும் அணிந்து இருந்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி துணை கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். டி.வி. நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்கிய பிறகு முதல்முறையாக களம் கண்ட லோகேஷ் ராகுல், வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் ஆடினார். ஆனால் ரோகித் சர்மா (5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதன் பிறகு கேப்டன் விராட் கோலி நுழைந்தார்.

இந்த ஆடுகளத்தன்மை மிகவும் மெதுவாக (ஸ்லோ) காணப்பட்டது. அதனால் பந்து அதிகமாக எழும்பவே இல்லை. இத்தகைய ஆடுகளங்களில் வலுவான ஷாட்டுகளை அடிப்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். ஆனால் இதை கணித்து அதற்கு ஏற்ப ஆடிய ராகுல் ஓரளவு வேகமாக ரன்களை சேகரித்தார். மறுமுனையில் கேப்டன் விராட் கோலி 24 ரன்களில் (17 பந்து, 3 பவுண்டரி) கிரீசை விட்டு இறங்கி வந்து பந்தை தூக்கிய போது கேட்ச் ஆனார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 9.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 80 ரன்களுடன் நல்ல நிலையிலேயே இருந்தது. இதனால் எப்படியும் 160 ரன்களை தாண்டும் என்றே நினைக்கத்தோன்றியது.

இந்த சூழலில் அடுத்தடுத்த விக்கெட் சரிவால் இந்திய அணி திடீரென நிலைகுலைந்து போனது. அடுத்த 20 ரன்கள் எடுப்பதற்குள் ரிஷாப் பான்ட் (3 ரன்), லோகேஷ் ராகுல் (50 ரன், 36 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) உள்பட 4 வீரர்கள் நடையை கட்டினர். இதனால் இந்தியாவின் ரன்வேகம் ஒரேயடியாக படுத்துக் கொண்டது. கடைசி கட்டத்தில் மூத்த வீரர் டோனி, ரன்-ரேட்டை அதிகப்படுத்த முயற்சித்தார். இதனால் ஒரு ரன்னுக்காக ஓடுவதை பெரும்பாலும் தவிர்த்தார். ஆனால், அவரும் பந்தை எல்லைக்கோட்டிற்கு விரட்ட முடியாமல் திண்டாடித்தான் போனார். கடைசி 10 ஓவர்களில் பந்து ஒரு முறை மட்டுமே எல்லைக்கோட்டை தாண்டியதை பார்க்க முடிந்தது. இதனால் இந்திய அணி 130 ரன்களை கூட தொட முடியாமல் அடங்கிப் போனது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 126 ரன்களே எடுத்தது. டோனி 29 ரன்களுடன் (37 பந்து, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நிலே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் சிறிய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் (1 ரன்), கேப்டன் பிஞ்ச் (0) வந்த வேகத்தில் வெளியேற்றப்பட்டனர். இதன் பிறகு மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டார்சி ஷார்ட்டும், கிளைன் மேக்ஸ்வெல்லும் இணைந்து தங்கள் அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். அணியின் ஸ்கோர் 89 ரன்களை எட்டிய போது, மேக்ஸ்வெல் 56 ரன்களில் (43 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அதைத் தொடர்ந்து டார்சி ஷார்ட் (37 ரன்) ரன்-அவுட் ஆக, இந்தியாவுக்கு சற்று நம்பிக்கை பிறந்தது. கடைசி கட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா 19-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ரன் மட்டுமே கொடுத்து மிரட்டினார்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால் 20-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சொதப்பி விட்டார். களத்தில் நின்ற ஜெயே ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் ஜோடி முதல் 5 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்தனர். இதனால் கடைசி பந்தில் அந்த அணிக்கு 2 ரன் தேவையாக இருந்தது. இதை எதிர்கொண்ட கம்மின்ஸ் பந்தை நேர் பகுதியில் அடித்து விட்டு 2 ரன் ஓடினார். சுதாரித்து துரிதமாக செயல்பட்டிருந்தால் ரன்-அவுட் ஆக்கி ஆட்டத்தை சமன் செய்திருக்கலாம். அந்த வாய்ப்பையும் நமது வீரர்கள் நழுவ விட்டனர்.

20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. கம்மின்ஸ், ஜெயே ரிச்சர்ட்சன் தலா 7 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய வீரர் நாதன் கவுல்டர்-நிலே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 27-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது.

கோலி சாதனை

* இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று எடுத்த 24 ரன்களையும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 514 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக 500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார்.

* 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் வெற்றி பெறுவது இது 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 205 ரன்கள் இலக்கை துரத்தியபோதும் கடைசி பந்தில் வெற்றி கண்டிருந்தது.

* இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறிப்பது இது 4-வது நிகழ்வாகும்.

தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கருத்து

‘‘லோகேஷ் ராகுலின் பேட்டிங் அருமையாக இருந்தது. இந்த ஆடுகளத்தன்மையில் 150 ரன்கள் என்பது வெற்றிக்குரிய ஸ்கோராக இருந்திருக்கும். எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை. அதே சமயம் பந்து வீச்சு திருப்தி அளித்தது. ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியான அணி. அவர்கள் எங்களை விட நன்றாக ஆடினர்’’ என்று கூறினார்.