கிரிக்கெட்

சில நாட்களில் ‘இறுதி கட்ட பந்து வீச்சு நினைத்த மாதிரி அமையாமலும் போகும்’ - பும்ரா கருத்து + "||" + In a few days 'The final stroke of the ball is going to be a model' - Bumra opinion

சில நாட்களில் ‘இறுதி கட்ட பந்து வீச்சு நினைத்த மாதிரி அமையாமலும் போகும்’ - பும்ரா கருத்து

சில நாட்களில் ‘இறுதி கட்ட பந்து வீச்சு நினைத்த மாதிரி அமையாமலும் போகும்’ - பும்ரா கருத்து
‘சில நாட்களில் இறுதி கட்ட பந்து வீச்சு நாம் நினைத்த மாதிரி அமையாமலும் போகும்’ என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்தார்.
விசாகப்பட்டினம்,

விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. 19-வது ஓவரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி வெற்றியை தன்வசப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


ஆனால் கடைசி ஓவரில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 2 பவுண்டரிகள் உள்பட 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் இந்திய அணி வெற்றி வாய்ப்பை தாரை வார்த்தது. எனவே உமேஷ் யாதவின் கடைசி ஓவர் பந்து வீச்சு குறித்து பலரும் கடும் விமர்சனம் செய்தனர்.

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடைசி ஓவரில் இதுபோல் நடக்க தான் செய்யும். எந்தவொரு சூழ்நிலையிலும் கடைசி கட்ட பந்து வீச்சு எப்பொழுதும் கடினமானது தான். இறுதி கட்ட பந்து வீச்சு இரண்டு வகையாகவும் போகும். உங்களது பந்து வீச்சில் சிறப்பாக முயற்சித்தாலும், தெளிவான திட்டத்துடன் பந்து வீசினாலும் சில நாட்களில் நமக்கு பலன் கிடைக்கும். சில நாட்களில் நினைத்த மாதிரியான பலன் கிடைக்காமலும் போகக்கூடும். எனவே அது பற்றி கவலைப்படக்கூடாது. நெருக்கமான போட்டி நிலவிய இந்த ஆட்டத்தில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்க முயற்சித்தோம். ஆனால் அதற்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை.

‘டாஸ்’ வென்றது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமைந்தது. வெற்றி இலக்கு சிறியதாக இருந்ததால் ஆஸ்திரேலிய அணி ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து விட்டால் அந்த ஓவரில் அடுத்த பந்துகளை ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டாத நிலை இருந்தது. நாங்கள் முதலில் ஆடியதால் நல்ல ஸ்கோரை எடுக்க அடித்து ஆட வேண்டிய நிலையில் இருந்தோம். இது தான் இந்த ஆட்டத்தில் இரண்டு அணிக்கும் இடையிலான வித்தியாசமாகும்.

இந்த ஆடுகளத்தில் 140 முதல் 145 ரன்கள் எடுத்து இருந்தால் மிகவும் நல்ல ஸ்கோராக இருந்து இருக்கும். உயரம் குறைவாக பந்து பவுன்ஸ் ஆனதால் பெரிய ஷாட் அடிப்பது கடினமாகி விட்டது. இதுபோன்ற ஆடுகளத்தில் சேசிங் செய்வது கடினமானதாகும். 15 முதல் 20 ரன்கள் நாங்கள் குறைவாக எடுத்தாலும் போட்டி அளிக்கக்கூடிய ஸ்கோரை எட்டினோம். நாங்கள் நினைத்ததை விட இரண்டு, மூன்று விக்கெட்டுகளை கூடுதலாக இழந்து விட்டோம். இந்த ஆடுகளத்தில் அதிக ஸ்கோர் எடுப்பது என்பது கடினமானதாகும். நாங்கள் எல்லா வகையிலும் சிறப்பான முயற்சி எடுத்தோம். டோனியும் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் கிரிக்கெட்டில் இது போல் நடக்க தான் செய்யும்.

லோகேஷ் ராகுல் நன்றாக பேட்டிங் செய்தார். புதிய ஷாட்களை அவர் விளையாடினார். அவரை போன்ற சிறந்த வீரர் பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு நல்ல விஷயமாகும். கம்மின்ஸ் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்ததுடன், கடைசி பந்தில் 2 ரன் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். அவர் நம்பிக்கையுடன் விளையாடக்கூடிய திறமையான வீரர். இவ்வாறு ஜஸ்பிரித் பும்ரா கூறினார்.

மேக்ஸ்வெல் கருத்து

43 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெறுவேனா?. எந்த வரிசையில் நான் பேட்டிங் செய்வேன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வேன். இந்த ஆட்டத்தை போல் வரும் ஆட்டங்களிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற முடியும். இந்த ஆண்டில் வரும் ஆட்டங்களில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்கு இதுபோன்ற நெருக்கமான போட்டிகளில் நாங்கள் நிறையை முறை தோல்வியை சந்தித்து இருக்கிறோம். நெருக்கமான இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நாங்கள் உத்வேகத்தை திரும்ப பெற்றுள்ளோம். கடைசி ஓவரில் எங்களுக்கு நெருக்கடி இருந்தது. கம்மின்ஸ், ஜெயே ரிச்சர்ட்சன் அருமையாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். இந்த போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருப்பது எங்களுக்கு சிறப்பான ஊக்கமாகும். இந்த உத்வேகத்தை தொடர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு தயாராகுவதில் எங்களது ஆரம்பம் நல்ல அறிகுறியாக அமைந்துள்ளது. டோனி உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்றாலும் இந்த ஆடுகளத்தில் பெரிய ஷாட் ஆடுவது என்பது யாருக்கும் கடினமானது தான்’ என்று தெரிவித்தார்.