முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 715 ரன்கள் குவித்து டிக்ளேர் - இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்காளதேசம் போராட்டம்


முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 715 ரன்கள் குவித்து டிக்ளேர் - இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்காளதேசம் போராட்டம்
x
தினத்தந்தி 2 March 2019 7:31 AM GMT (Updated: 2 March 2019 7:49 PM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 715 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.

ஹாமில்டன்,

நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 93 ரன்னுடனும், நீல் வாக்னெர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வில்லியம்சன் 143 பந்துகளில் தனது 20-வது சதத்தை எட்டினார். செஞ்சுரிக்கு பிறகும் அவரது ரன்வேட்டை நீடித்தது. அவருடன் இணைந்து ஆடிய நீல் வாக்னெர் 47 ரன்னிலும், வாட்லிங் 31 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

இதையடுத்து களம் கண்ட கிரான்ட்ஹோம் அடித்து ஆடினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 163 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் நியூசிலாந்து அணி 700 ரன்களுக்கு மேல் கடப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அந்த அணி 690 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. கேப்டன் வில்லியம்சன் 257 பந்துகளில் 19 பவுண்டரியுடன் 200 ரன்னும், கிரான்ட்ஹோம் 53 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 76 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த போட்டியில் வில்லியம்சன் 135 ரன்களை எட்டிய போது டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். அவர் 126 இன்னிங்சில் ஆடி 6,065 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர்களில் ராஸ் டெய்லர் 145 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டிப்பிடித்ததே சிறப்பானதாக இருந்தது.

பின்னர் 481 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. சவுமியா சர்கார் 39 ரன்னுடனும், கேப்டன் மக்முதுல்லா 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story