ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் இந்தியா ‘திரில்’ வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் விராட்கோலி பாராட்டு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் இந்தியா ‘திரில்’ வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் விராட்கோலி பாராட்டு
x
தினத்தந்தி 6 March 2019 11:00 PM GMT (Updated: 6 March 2019 9:19 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.

நாக்பூர்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.

விராட்கோலி பேட்டி

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. அதிகபட்சமாக இந்திய அணியில் விராட்கோலி 116 ரன்னும், விஜய் சங்கர் 46 ரன்னும், ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் 52 ரன்னும், ஹேன்ட்ஸ்கோம்ப் 48 ரன்னும் எடுத்தனர்.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நான் பேட்டிங் செய்ய வருகையில் ஆட்ட சூழ்நிலை மிகவும் கடினமாக இருந்தது. இன்னிங்ஸ் முழுவதும் நிலைத்து நின்று ஆடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. எங்களது பேட்டிங்கை விட பந்து வீச்சு அதிக பெருமைப்படக்கூடிய வகையில் இருந்தது. விஜய் சங்கர் அருமையாக பேட்டிங் செய்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் ‘ரன்–அவுட்’ ஆனார். கேதர் ஜாதவ், டோனி விக்கெட்டை விரைவில் இழந்தோம்.

கடைசி ஓவரை விஜய் சங்கருக்கு வழங்கியது ஏன்?

46–வது ஓவரில் விஜய் சங்கரை பந்து வீச வைக்கலாம் என்று நான் யோசித்தேன். ஆனால் இது குறித்து துணைகேப்டன் ரோகித் சர்மா, டோனி ஆகியோரிடம் ஆலோசித்தேன். அவர்கள் இருவரும் முகமது ‌ஷமி, பும்ராவை பந்து வீச வைத்து விக்கெட்டை வீழ்த்தி நல்ல நிலையை எட்ட முயற்சிக்கலாம் என்றும் ஸ்டம்பை குறி வைத்து பந்து வீசக்கூடிய விஜய் சங்கரை கடைசி ஓவரில் பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தனர். அவர்கள் சொன்னபடி எல்லாம் சரியாக நடந்தது. கடைசி ஓவரில் விஜய் சங்கர் சிறப்பாக பந்து வீசினார். துணை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டோனியுடன் எப்பொழுதும் ஆலோசிப்பது சிறப்பானதாகும்.

பும்ரா சாம்பியன் பவுலர். ஒரே ஓவரில் அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. நமது அணியில் அவர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற ஆட்டத்தில் வெற்றி பெறுவது நம்பிக்கையை அதிகரிக்கும். மோசமான நிலையில் இருந்து வெற்றியை வசப்படுத்துவது முக்கியமானதாகும். உலக கோப்பை போட்டியிலும் இது போன்ற குறைவான ஸ்கோர் கொண்ட ஆட்டங்கள் அமையக்கூடும். இது போன்ற ஆடுகளங்கள் கேதர் ஜாதவுக்கு நன்கு பொருந்தும். கடைசி ஓவரில் பந்து வீச அவர் தயாராக இருந்தார். 40–வது சதம் அடித்தது நல்ல உணர்வை தந்தாலும் அது ஒரு எண்ணிக்கை தான். சதத்தை விட இந்திய அணியின் வெற்றியே முக்கியமானதாகும்.

இவ்வாறு விராட்கோலி கூறினார்.

போதிய ரன் எடுக்கவில்லை

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் அணி வீரர்கள் நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். ஆனால் சிறப்பான தொடக்கத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. நாங்கள் போதிய ரன்கள் எடுக்கவில்லை. எங்கள் அணியின் முன்னணி வீரர்கள் 30, 40 ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஆனால் இந்திய அணியில் கேப்டன் விராட்கோலி சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் அவரது ஆட்டம் தான் வித்தியாசமாகும். எங்கள் அணியின் முன்னணி வீரர்களில் யாராவது ஒருவர் 80 முதல் 100 ரன்கள் எடுத்து இருந்தால் இந்த ஆட்டத்தில் நாங்கள் ஒருவேளை வென்று இருக்கலாம். மார்கஸ் ஸ்டோனிஸ் சிறப்பாக விளையாடினார். கடைசி ஓவரில் அவர் அடித்து ஆட முயற்சித்து ஆட்டம் இழந்ததை தவறு என்று சொல்ல முடியாது. அதனை தவிர வேறு வாய்ப்பு இல்லாததால் அவர் அடித்து ஆடினார்’ என்றார்.

கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த தமிழகத்தை சேர்ந்த ஆல்–ரவுண்டர் விஜய் சங்கர் அளித்த பேட்டியில், ‘இந்த வாய்ப்புக்காக நான் காத்து இருந்தேன். கடைசி ஓவரில் பந்து வீச நான் மனதளவில் தயாராகவே இருந்தேன். அதனை சரியாக செய்தால் தான் என்னால் என்ன முடியும் என்பதை மக்கள் அறிய முடியும். ஸ்டம்பை குறிவைத்து பந்து வீசி விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டேன். தேசிய அணிக்காக விளையாடுகையில் அணிக்கு என்ன தேவையோ? அதனை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். வாய்ப்பு வரும் போது அதனை பற்றி கொள்ள வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.


Next Story