இலங்கைக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி


இலங்கைக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 7 March 2019 10:00 PM GMT (Updated: 7 March 2019 9:06 PM GMT)

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 45.1 ஓவர்களில் 251 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் 94 ரன்னும் (70 பந்துகளில் 17 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 57 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இலங்கை அணி தரப்பில் திசரா பெரேரா 3 விக்கெட்டும், மலிங்கா, தனஞ்செயா டி சில்வா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 32.2 ஓவர்களில் 138 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி கடைசி 46 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஒஷாடா பெர்னாண்டோ 31 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபடா 3 விக்கெட்டும், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்ஜி, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஏற்கனவே ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி டர்பனில் நாளை மறுநாள் நடக்கிறது.


Next Story