கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 3–வது ஆட்டம் ராஞ்சியில் இன்று நடக்கிறது + "||" + One Day Against Australia: Is the Indian team the capture of the series?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 3–வது ஆட்டம் ராஞ்சியில் இன்று நடக்கிறது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 3–வது ஆட்டம் ராஞ்சியில் இன்று நடக்கிறது
இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் 3–வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. ‘ஹாட்ரிக்’ வெற்றியோடு இந்தியா தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராஞ்சி,

இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் 3–வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. ‘ஹாட்ரிக்’ வெற்றியோடு இந்தியா தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு நாள் கிரிக்கெட்

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே இந்தியா 6 விக்கெட் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல்–இரவு மோதலாக அரங்கேறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் உள்ளனர்.

டோனியின் சொந்த ஊர்

இன்னொரு வகையிலும் இந்த ஆட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான 37 வயதான டோனியின் சொந்த ஊராகும். அவரை கவுரவப்படுத்தும் வகையில் இந்த ஸ்டேடியத்தின் ஒரு கேலரிக்கு டோனியின் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அனேகமாக சொந்த ஊரில் அவர் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டியாக இது இருக்கும். அதனால் அவரது அதிரடியான பேட்டிங்கை காண உள்ளூர் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதே போல் சக வீரர்களும் அவருக்கு வெற்றியை பரிசாக சமர்பிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்திய அணியை பொறுத்தவரை ஷிகர் தவானின் பேட்டிங் பார்ம் தான் கவலை அளிக்கிறது. ஆனாலும் வெற்றிக் கூட்டணியை உடைக்க கேப்டன் கோலி விரும்பமாட்டார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. முதல் 2 ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் அணிக்கு திரும்புகிறார். அதனால் முகமது ‌ஷமி வெளியே உட்கார வைக்கப்படலாம்.

ஸ்டோனிஸ் பரிதாபம்

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் இரு ஆட்டத்திலும் சாதகமான முடிவை நோக்கி பயணித்தே கோட்டை விட்டது. முதலாவது ஆட்டத்தில் 99 ரன்னுக்குள் இந்தியாவின் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பிறகு டோனியும், கேதர் ஜாதவும் அரைசதம் அடித்து இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

2–வது ஆட்டத்தில் 251 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போது முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் கண்டனர். அதன் பிறகு மிடில் ஓவர்களில் இந்திய சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிப்போனார்கள். ஆனாலும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில், அப்போது மார்கஸ் ஸ்டோனிஸ் (52 ரன்) களத்தில் நின்றும் அந்த அணியால் இலக்கை எட்ட முடியாமல் போய் விட்டது. இந்திய ஆல்–ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் கடைசி ஓவரை அற்புதமாக வீசி ஆஸ்திரேலியாவின் எஞ்சிய இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

ஸ்டோனிஸ் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 7 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஆனால் ஒன்றில் கூட அந்த அணி வெற்றி பெற்றதில்லை. அந்த துரதிர்ஷ்டத்தை நாக்பூர் போட்டியிலும் பார்க்க முடிந்தது.

தவறுகளை திருத்திக்கொண்டு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் முயற்சிப்பார்கள். இது அவர்களுக்கு வாழ்வா–சாவா ஆட்டம் என்பதால் முடிந்தவரை கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.

மைதானம் எப்படி?

ராஞ்சி ஆடுகளத்தன்மை வேகமின்றி (ஸ்லோ) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவில் பனிப்பொழிவின் தாக்கமும் இருக்கலாம்.

இங்கு இதுவரை 4 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 2–ல் வெற்றியும் (இங்கிலாந்து, இலங்கைக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (நியூசிலாந்துக்கு எதிராக) கண்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் மழையால் முடிவு கிடைக்கவில்லை. 2013–ம் ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா எடுத்த 295 ரன்களே, இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். இலங்கையின் மேத்யூஸ் (139 ரன்), இந்தியாவின் விராட் கோலி (139 ரன்) ஆகிய இருவர் மட்டும் இங்கு சதம் அடித்துள்ளனர்.

பிற்பகல் 1.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, முகமது ‌ஷமி அல்லது புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, நாதன் கவுல்டர்–நிலே, கம்மின்ஸ், நாதன் லயன், ஆடம் ஜம்பா.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்‌ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

‘வீரர்களுக்கு ஓய்வு அவசியம்’–புவனேஷ்வர்குமார்

3–வது ஒரு நாள் போட்டியையொட்டி இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கிறது? யாருக்கு இடம் கிடைக்கவில்லை? என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. அதைவிட முக்கியமானது, வீரர்களுக்குரிய ஓய்வு. நியூசிலாந்து தொடரில் முகமது ‌ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த தொடரில் முதல் 2 ஆட்டங்களுக்கு எனக்கு ஓய்வு தரப்பட்டது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், நல்ல உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று தான் எல்லா வீரர்களும் விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் தான் எனக்கு ஓய்வு வழங்கப்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராவதற்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 3 ஆட்டங்களும் மிகவும் முக்கியமானது. எந்த ஆட்டத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். உலக கோப்பைக்கு தயாராவதற்கு ஐ.பி.எல். சரியான அடித்தளமாக இருக்கும் என்று சொல்ல முடியாது’ என்றார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடிய போது மூன்று ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சின் விக்கெட்டை புவனேஷ்வர்குமார் கபளீகரம் செய்தார். அவருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியதன் ரகசியம் என்ன என்று கேட்ட போது, ‘அவர் அவுட் ஆப் பார்மில் இருந்தார்’ என்று புவனேஷ்வர்குமார் துரிதமாக பதில் அளித்தார். உலக கோப்பையை கருத்தில் கொண்டு, ஐ.பி.எல். தொடரின் பிற்பகுதியில் முக்கியமான இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் அவர் சூசகமாக குறிப்பிட்டார்.