இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ரிஷாப் பான்ட் உள்பட 25 வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் நீக்கம்


இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ரிஷாப் பான்ட் உள்பட 25 வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் நீக்கம்
x
தினத்தந்தி 8 March 2019 11:00 PM GMT (Updated: 8 March 2019 9:55 PM GMT)

இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ரிஷாப் பான்ட் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

புதுடெல்லி,

இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ரிஷாப் பான்ட் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் உள்பட 6 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

6 வீரர்கள் நீக்கம்

இந்த ஆண்டுக்கான (2018–19) புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. கடந்த வருடம் ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்று இருந்த முரளி விஜய் (‘ஏ’ பிரிவு), சுரேஷ் ரெய்னா, பார்த்தீவ் பட்டேல், ஜெயந்த் யாதவ், அக்‌ஷர் பட்டேல், கருண் நாயர் (5 பேரும் ‘சி’ பிரிவு) ஆகியோருக்கு இந்த ஆண்டு பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.

ரூ. 7 கோடி ஒப்பந்த தொகை கொண்ட ‘ஏ பிளஸ்’ பிரிவில் கேப்டன் விராட்கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நீடிக்கின்றனர்.

ஏ பிரிவில் ரிஷாப் பான்ட்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ரூ.5 கோடி ஒப்பந்த தொகை கொண்ட ‘ஏ’ பிரிவில் நேரடியாக இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டில் ‘ஏ பிளஸ்’ பிரிவில் இடம் பெற்று இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் ‘ஏ’ பிரிவுக்கு தரம் இறக்கப்பட்டுள்ளனர். டோனி, புஜாரா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரஹானே ஆகியோர் ‘ஏ’ பிரிவில் தொடர்ந்து நீடிக்கின்றனர். இஷாந்த் ‌ஷர்மா, முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் ‘பி’ பிரிவில் இருந்து ‘ஏ’ பிரிவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

ரூ.3 கோடி ஒப்பந்த தொகை கொண்ட ‘பி’ பிரிவில் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தொடருகின்றனர். ரூ.1 கோடி ஒப்பந்த தொகை கொண்ட ‘சி’ பிரிவில் கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே ஆகியோர் நீடிக்கின்றனர். கடந்த ஆண்டில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து இருந்த விருத்திமான் சாஹா, ‘பி’ பிரிவில் இடம் பிடித்து இருந்த தினேஷ் கார்த்திக் ஆகியோர் ‘சி’ பிரிவுக்கு தரம் இறங்கி இருக்கிறார்கள். அம்பத்தி ராயுடு, ஹனுமா விஹாரி, கலீல் அகமது ஆகியோர் புதிதாக ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

விஜய் சங்கருக்கு இடமில்லை

தங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை சமீபத்தில் தொடங்கிய பிரித்வி ஷா, விஜய் சங்கர், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு ஒப்பந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. ஒப்பந்த பட்டியலில் இடம் பெற குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒரு நாள் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும் என்று தகுதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு ஒப்பந்தத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


Next Story