பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் சுமித், வார்னருக்கு இடமில்லை


பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் சுமித், வார்னருக்கு இடமில்லை
x
தினத்தந்தி 8 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-09T03:27:50+05:30)

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தடை காலம் முடிந்து இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சுமித், வார்னருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சிட்னி,

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தடை காலம் முடிந்து இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சுமித், வார்னருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சுமித், வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய பயணம் முடிந்ததும் அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 22–ந்தேதி சார்ஜாவில் நடக்கிறது.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் மீதான ஓராண்டு தடை காலம் வருகிற 28–ந்தேதியுடன் நிறைவடைவதால், கடைசி இரு ஆட்டங்களில் (மார்ச் 29 மற்றும் 31–ந்தேதி) அவர்கள் சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர்களுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. இதே போல் காயத்தில் இருந்து குணமடையாத வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் சேர்க்கப்படவில்லை.

ஐ.பி.எல். போட்டியில்...

ஆஸ்திரேலிய தேர்வு கமிட்டி தலைவர் டிரெவோர் ஹான்ஸ் கூறுகையில், ‘ஸ்டீவன் சுமித், வார்னர் ஆகியோர் மீதான தடை காலம் மார்ச் 28–ந்தேதியுடன் முடிகிறது. இருவரும் காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உலகின் முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளும் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு அவர்கள் திரும்புவதே சரியானதாக இருக்கும். டேவிட் வார்னர் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காகவும், ஸ்டீவன் சுமித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாட உள்ளனர். உலக கோப்பை மற்றும் ஆ‌ஷஸ் தொடருக்கு தயாராகி வரும் நாங்கள் ஐ.பி.எல். போட்டியில் அவர்களின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிப்போம்’ என்றார்.

ஆஸ்திரேலிய அணி வருமாறு:– ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி (துணை கேப்டன்), கம்மின்ஸ் (துணை கேப்டன்), நாதன் கவுல்டர்–நிலே, ஜெயே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஜாசன் பெரேன்டோர்ப், நாதன் லயன், ஆடம் ஜம்பா.

பாகிஸ்தான் அணியும்...

இதற்கிடையே இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பாபர் அசாம், பஹார் ஜமான், ஹசன் அலி உள்பட 6 பேருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணியை வழிநடத்த உள்ளார். உமர் அக்மல், ஜூனைட் கான் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.


Next Story