கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 3–வது ஆட்டத்தில் இந்தியா தோல்வி விராட் கோலியின் சதம் வீண் + "||" + One Day Against Australia: India lost in the 3rd match

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 3–வது ஆட்டத்தில் இந்தியா தோல்வி விராட் கோலியின் சதம் வீண்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 3–வது ஆட்டத்தில் இந்தியா தோல்வி விராட் கோலியின் சதம் வீண்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. விராட் கோலி சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது.

ராஞ்சி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. விராட் கோலி சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது.

ஒரு நாள் கிரிக்கெட்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் நாதன் கவுல்டர்–நிலேவுக்கு பதிலாக ஜெயே ரிச்சர்ட்சன் இடம் பிடித்தார்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கேப்டன் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் கவாஜாவும் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை தொடங்கினர். அவசரம் காட்டாமல் நிலைத்து நின்று ஆடிய இவர்கள் அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்து தந்தனர். கவாஜா 17 ரன்னில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஷிகர் தவான் வீணடித்தார். அது மட்டுமின்றி சரியாக பீல்டிங் செய்யாமல் நிறைய ரன்களை நமது வீரர்கள் கோட்டை விட்டனர். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மளமளவென எகிறியது. ஜாதவின் ஒரே ஓவரில் பிஞ்ச் 2 சிக்சர், பவுண்டரி விரட்டி மிரட்டினார். 25–வது ஓவரில் அந்த அணி 156 ரன்களை தொட்டது.

கவாஜா சதம்

ஒரு வழியாக இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பிரித்தார். ஸ்கோர் 193 ரன்களாக (31.5 ஓவர்) உயர்ந்த போது கேப்டன் ஆரோன் பிஞ்ச் (93 ரன், 99 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் அவருக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. இவர்கள் திரட்டிய 193 ரன்களே, இந்த மைதானத்தில் ஒரு ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப்பாகும்.

அடுத்து வந்த கிளைன் மேக்ஸ்வெல்லும், சரவெடியாய் வெடிக்க ஸ்கோர் மேலும் உயர்ந்தது. இதற்கிடையே உஸ்மான் கவாஜா, ஒரு நாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு கட்டத்தில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 232 ரன்கள் (37 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது, ஆஸ்திரேலியா 350 ரன்களை தாண்டும் போலவே தோன்றியது. ஆனால் இறுதி கட்டத்தில் இந்திய பவுலர்கள் ஓரளவு கட்டுக்கோப்புடன் பந்து வீசி ஆறுதல் அளித்தனர். கவாஜா 104 ரன்களில் (113 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். மேக்ஸ்வெல் 47 ரன்களில் (31 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்–அவுட் ஆனார். அதன் பிறகு மேலும் இரு விக்கெட்டுகள் சரிந்தன.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் 300 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றது. அதே சமயம் கடைசி 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது கவனிக்கத்தக்கது.

இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கம்

பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து தடுமாறும் ஷிகர் தவான் (1 ரன்) இந்த முறையும் சொதப்பினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 14 ரன்னில் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அம்பத்தி ராயுடுவும் (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் 27 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (6.2 ஓவர்) இழந்து இந்திய அணி தள்ளாடியது.

இந்த நெருக்கடியான சூழலில் கேப்டன் விராட் கோலியும், உள்ளூர் நாயகன் டோனியும் கைகோர்த்தனர். இருவரும் அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டனர். லயனின் சுழலில் டோனி ஒரு அட்டகாசமான சிக்சரை பறக்கவிட்டு சொந்த ஊர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் முக்கியமான கட்டத்தில் டோனி (26 ரன், 42 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேதர் ஜாதவும் (26 ரன்) கோலிக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுத்தார்.

கோலி சதம்

மறுமுனையில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த விராட் கோலி தனது 41–வது சதத்தை எட்டி அசத்தினார். முந்தைய ஆட்டத்திலும் அவர் சதம் அடித்தது நினைவிருக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் 8–வது செஞ்சுரியாகவும் இது அமைந்தது.

இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக திகழ்ந்த கோலி, 38–வது ஓவரில் அவுட் ஆனார். சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து 2 பவுண்டரி விரட்டியடித்த கோலி மறுபடியும் விளாச முயற்சித்த போது போல்டு ஆனார். கோலி 123 ரன்களுடன் (95 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அதன் தொடர்ச்சியாக சிறிது நேரத்தில் விஜய் சங்கரும் (32 ரன், 30 பந்து, 4 பவுண்டரி) வெளியேற இந்தியாவின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது.

ஆஸ்திரேலியா வெற்றி

இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

வெற்றி பெற்றாலும் 5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா 1–2 என்ற கணக்கில் இன்னும் பின்தங்கியே இருக்கிறது. முதல் 2 ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி மொகாலியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கேப்டனாக 4 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து கோலி சாதனை

இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 27 ரன்கள் எடுத்த போது, கேப்டனாக ஒரு நாள் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை எட்டினார். கேப்டன் பொறுப்பில் 63 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இதன் மூலம் 4 ஆயிரம் ரன்களை அதிவேகமாக எட்டிய கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 77 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. அவரை கோலி பின்னுக்கு தள்ளினார். இந்த சாதனை பட்டியலில் 3–வது இடத்தில் இந்தியாவின் டோனியும் (100 இன்னிங்ஸ்), 4–வது இடத்தில் சவுரவ் கங்குலியும் (103 இன்னிங்ஸ்) உள்ளார்.